Show all

மோடிக்கு ‘மணிக்கிய மலரய பூவே’ பாடலை பரிந்துரைக்கும் ஜிக்னேஷ் மேவானி

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகம் முழுவதும் இன்று காதலர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், காதலர் நாள் கொண்டாடக்கூடாது, அது இந்தியாவின் கலாச்சாரம் இல்லை, பாரம்பரியம் இல்லை எனக் கூறி பஜ்ரங்தள், ஹிந்து சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில மாநிலங்களில் காதலர்களை தாக்கியும், அவர்களை அவமானப்படுத்தியும் ஹிந்து அமைப்புகள் செய்கின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரும், தலித் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கீச்சுவில் காதலர் நாளான இன்று இடுகை பதிந்துள்ளார்.

அதில், ‘மோடிக்கு இதுவரை யாரேனும் தன் காதலைச் சொல்லி இருக்கிறார்களா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆனால், எனக்கு காதலைச் சொன்னவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கீச்சில் அவர் கூறுகையில், பாரம்பரிய இந்தியர்கள் எப்போதும் வெறுப்புணர்வைக் காட்டிலும், அன்பு செலுத்துவதையே அதிகமாக விரும்புவார்கள். மலையாளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ‘ஒரு அடார் லவ் திரைப்படத்தின் ‘மணிக்கிய மலரய பூவே பாடல்தான் காதலர் நாளில் போராட்டம் நடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் மற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் பதிலாக இருக்கும்.

பாரம்பரிய இந்தியர்கள் எப்போதும் வெறுப்பைக் காட்டிலும் அன்பைத்தான் விரும்புவோம் என்பதை நிரூபித்து வருகிறார்கள். இந்த அழகான காணொளியைப் பார்த்து ரசியுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டும் காதலர்களை தொந்தரவு செய்யத் தவறவில்லை. கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் தொந்தரவு அளித்து வருகின்றனர்.

ஐதராபாத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் காதலர்களைத் தாக்கியும், அவர்களை துன்புறுத்தியும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

சென்னையில் கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்து ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் காதலர் நாளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காதல், வீரம் இரண்டும் தமிழர்க்கு இரண்டு கண்கள். காதலர் நாள் என்பது ஐரோப்பிய கலாச்சாரம் என்றாலும், அதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் தமிழர்க்கு இல்லை. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஹிந்துத்துவா என்பது ஆணாதிக்க ஆரிய நாடோடிக் கலாச்சாரம்தாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,698

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.