Show all

புல்லட் தொடர்வண்டித் திட்டப் பணிகளை நிறுத்தியது ஜப்பான்! நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சனை தீர்ந்தாலே நிதியுதவி

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்லட் தொடர்வண்டி திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. உழவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியேற்று அந்த ஆட்சிகாலம் முடிவதற்குள், புல்லட் தொடர்வண்டி திட்டத்தை தொடங்கிட பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இந்த புல்லட் தொடர்வண்டி மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்படுமாம்.

புல்லட் தொடர்வண்டி திட்டத்திற்கு 1.60 லட்சம் கோடி செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 1.10லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்கிறது.

ஜப்பான் அரசு மூலம், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கும் பணத்தில் ஜப்பான் ஊழியர்கள் இந்த புல்லட் தொடர்வண்டிப் பாதையை போட இருக்கிறார்கள். இதற்காக குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் சுமார் 1400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அதில் 900 ஏக்கர் நிலம் வேளாண் நிலம்.

இதனால் பல ஆயிரம் உழவர்கள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். இதனால் கடந்த கிழமை உழவர்கள் மோடிக்கு எதிராகவும், இந்த திட்டத்திற்கு எதிராகவும் ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள். அதேபோல் பணம் வழங்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இதற்காக கடிதம் எழுதியுள்ளனர். இந்த திட்டத்தை நிறுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால் புல்லட் தொடர்வண்டி திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இந்த நிதியுதவியை நிறுத்தி இருக்கிறது. இதனால் மும்பைக்கும் அஹமதாபாத்துக்கும் இடையில் புல்லட் தொடர்வண்டிப் பாதை போடப்படும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. காலவரையின்றி பணிகளை நிறுத்துவதாக ஜப்பான் நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு குஜராத் உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இந்த திட்டம் நிறுத்தப்படுகிறது. முதலில் அந்த பகுதி மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உழவர்களின் பிரச்சனையை முதலில் அரசு தீர்க்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சனை தீர்ந்தாலே நிதியுதவி அளிக்கப்படும் என்று அரசுக்கு ஜப்பான் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,921.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.