Show all

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், அனைவரும் விடுதலை! அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாசனூரில் உள்ள பண்ணை வீட்டில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி பர்வதம்மாளுடன் ராஜ்குமார் தங்கியிருந்தபோது, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக தாளவாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு கோவை தமிழ்நாடு காவல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு மாற்றப்பட்டது.

தூதுவர்கள் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 108 நாட்களுக்கு பிறகு நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் விடுவித்தார். இந்த வழக்கில், வீரப்பன், அவருடைய நண்பர்கள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா, மல்லு, மாறன், கோவிந்த ராஜ் என்கிற இனியன், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என்கிற சத்தியா, அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், புட்டுசாமி, கல் மண்டிராமா, ரமேஷ் ஆகிய 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோரை காவல்துறையினர் கொன்று விட்டனர். மல்லு என்பவர் இறந்து விட்டார். ரமேஷ் தலைமறைவாக உள்ளார்.

இவ்வழக்கின் விசாரணை கோபி கூடுதல் மாவட்ட 3-வது அமர்வு அறங்கூற்றுமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் உட்பட மொத்தம் 42 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். 52 ஆவணங்கள், துப்பாக்கி உள்ளிட்ட 31 பொருட்களை காவல்துறையினர் அறங்கூற்றுமன்றத்தில் ஒப்படைத்தனர்.

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவதாக அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறை போதிய ஆதாரங்களை பதிகை செய்யவில்லை எனவும் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லை எனவும் அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது.

பதினெட்டு ஆண்டுகளாக குற்றம் சுமத்தப் பட்டவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் பட்ட பாட்டிற்கு தெய்வத்தைக் குற்றம் சொல்வதா? தலைவிதியை நொந்து கொள்வதா? இந்தத் துன்பத்தை அவர்கள் தவிர்த்திருக்க முடியுமா? எப்படி தவிர்த்திருக்க முடியும்? கேள்விகள் நிறைய எழும். விடைதான் ஒன்றும் கிட்டாது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,921.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.