Show all

ஜம்மு-காஷ்மீரில் முகநூல், கீச்சு, உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குத் தடை

ஜம்மு-காஷ்மீரில் முகநூல், கீச்சு, உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

     இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில உள்துறை செயலகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தேசவிரோத சக்திகளும், சமூகவிரோத குழுவினரும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை, சமூக வலைதளங்கள் மூலம் பரப்புவதாக வெளியான தகவல்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்ததன் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இதையடுத்து, முகநூல், கீச்சு, புலனம், கூகுள் ப்ளஸ், ஸ்கைப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து காஷ்மீர் உள்துறை செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் என்றும், அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     மேலும், இளைஞர்களிடையே வதந்திகளை பரப்புவதாக கூறி 300 புலனக் குழுக்களையும் ஜம்மு-காஷ்மீர் அரசு தடை செய்துள்ளது. ஏற்கனவே, அங்கு செல்பேசியில் இணையதள வசதியை பயன்படுத்துவது கடந்த வாரம் முதல் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.