Show all

தமிழ்நாடு மின்சார வாரியம் கடன் பாக்கியைச் செலுத்தாததுதான் மின்தடைக்குக் காரணமா

சென்னையில், நேற்றிரவு  பல இடங்களில் திடீரென்று மின் தடை ஏற்பட்டது. அதிகாலை வரை நீடித்த மின் தடையால், மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மின் தடைகுறித்து மின்சாரத்துறை அதிகாரி அளித்த விளக்கத்தில், ‘தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் பழுது ஏற்பட்டுள்ளது. பழுது பார்க்கும் பணி நடந்துவருகிறது. பழுது சரிசெய்யப்பட்டதும் மின் விநியோகம் சீராகும்’ என்றார்.

     கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இரவிலும் அனல்காற்று வீசிவருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு 8 மணியளவில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வேப்பேரி, அண்ணாசாலை, புதுப்பேட்டை, அண்ணாநகர், புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். நள்ளிரவு 2 மணியளவில்தான் மீண்டும் மின் வினியோகம் தொடங்கியது.

     மின் தடைக்கு, தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட மின் பழுதுதான் காரணம் என்று மின்சாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துவந்தாலும், மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. திருவள்ளுர் மாவட்டம், வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால்தான் மின் தடை ஏற்பட்டுள்ளதாம்.

 

     வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு தமிழக அரசு செலுத்தவேண்டிய தொகை பாக்கி உள்ளதாம். தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி செலுத்தவேண்டி உள்ளதால், வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் அறிக்கை அனுப்பிவிட்டு, மின் விநியோகத்தை நிறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்சாரத்துறை தரப்பில், மின் தடைகுறித்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் இன்னும் அளிக்கவில்லை.

 

     நடுவண் அரசின் தேசிய அனல் மின்சார கழகமும் (என்.டி.பி.சி.) தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து சென்னையை அடுத்த வல்லூரில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒரு அனல் மின்சார நிலையத்தை அமைத்து இருக்கிறது.

     இந்த முதலீட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஊரக மின்சார கழகம் மூலம் கடனாக பெறப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.3 ஆயிரம் கோடியில், தேசிய அனல் மின்சார கழகம் ரூ.1,500 கோடியும், தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,500 கோடியும் முதலீடு செய்துள்ளது.

     தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 3 யூனிட்டுகளுடன் வல்லூர் மின்சார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 70 விழுக்காடு தமிழ்நாட்டுக்கும், மீதம் உள்ள 30 விழுக்காடு வெளிமாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது.

     இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கிய வகையில் ரூ.1156 கோடி பாக்கி தர வேண்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்தால் உடனடியாக கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

     இதனால் தேசிய அனல் மின்சார கழகம் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம், ரூ.1156 கோடிக்கு பதிலாக பங்கை தரும்படியும். முதலீடு செய்த பணத்தை திரும்ப தந்து விடுவதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் ரூ.1156 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருந்தாலும் தமிழ்நாடு நடுவண் அரசிடம் ஒரு உடைமையை இழக்கும்.

     ஏற்கனவே ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில்; தங்கள் உடைமையான அனல் மின்நிலையங்களை நடுவண் அரசிடம் இழந்துள்ளன.

     ரூ.1156 கோடி கடன் பாக்கியை செலுத்துவதா? அல்லது பங்கை கொடுப்பதா? என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் பொது மக்கள் தளத்திற்கு செல்லாமல் விடிவேதும் இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.