Show all

அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கே, அவலங்கள் மக்கள் மன்றத்திற்கு வராமல் பாதுகாக்கும் காரணியா

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்றத்தில் விரும்பத்தகாத விசயங்கள் நடக்கின்றன. இப்படியே போனால் மக்களாட்சி தலைக்காது என உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் சிலர் தெரிவித்தள்ளனர். மேலும் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா மீது பல குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் செல்லமேஸ்வர், ரஞ்சய் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகியோர் கூட்டாக இதழியலாளர்களை இன்று சந்தித்தனர்.

அப்போது அறங்கூற்றுவர்கள் கூறியதாவது: இந்த இதழியலாளர் சந்திப்பை கூட்ட வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். உச்சஅறங்கூற்று மன்ற நிர்வாகம் முறையாக நடக்கவில்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத சில விசயங்கள் நடக்கின்றன. இதழியலாளர் சந்திப்பது அறங்கூற்றுத் துறை வரலாற்றில் ஒரு சாதனை நிகழ்வாகும்.

எங்கள் ஆன்மாவை விற்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாக விரும்பவில்லை. உச்ச அறங்கூற்று மன்றத்திற்கும், நாட்டிற்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. உச்சஅறங்கூற்று மன்றத்தில் சில விசயங்கள் முறைப்படி நடக்கவில்லை. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை அறங்கூற்றுவரிடம் நாங்கள் முறையிட்டோம். ஆனால், எங்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. கடந்த சில மாதங்களாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் சூழ்நிலை சரியில்லை.

சில விசயங்கள் முறைப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்தினோம். சில விசயங்கள் முறைப்படி பின்பற்றப்படவில்லை. தலைமை அறங்கூற்றுவரை குறிப்பிட்ட கோரிக்கைகளுடன் நாங்கள் சந்தித்தோம். ஆனால், நாங்கள் சொல்வது சரி என எங்களால் நிருபிக்க முடியவில்லை. உச்சஅறங்கூற்று மன்றத்தைப் பாதுகாக்க முடியாவிட்டால், நாட்டில் மக்களாட்சியைப் பாதுகாக்க முடியாது. இதனால், உச்ச அறங்கூற்றுமன்ற நலன் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். தலைமை அறங்கூற்றுவரைத் தகுதி நீக்கம் செய்வது குறித்து நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். என்று தெரிவித்தனர்.

அறங்கூற்றுவர்கள் லஞ்சம் பெற்ற வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அறங்கூற்றுவர் செல்லமேஸ்வர் அமர்வு உத்தரவிட்டதை சில மாதங்களுக்கு முன்பு தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா ரத்து செய்ததில் இருந்துதான் அறங்கூற்றுவர்களிடையேயான பிரச்சனை வெடிக்க தொடங்கியதாம்.

அறங்கூற்றுவர்கள் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் தீபக் மிஸ்ராவின் பெயரும் இடம்பெற்றிருந்ததும் ஒரு காரணம். இதை உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தமது வாதத்தின் போது, தலைமை அறங்கூற்றுவர் மிஸ்ரா மீதும் முதல்தகவல்அறிக்கை பதியப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். இதனால் கோபமடைந்த தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, பிரசாந்த் பூஷண் மீது அறங்கூற்று மன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என எச்சரித்தார். இதில் அதிருப்தி அடைந்த பிரசாந்த் பூஷண், விசாரணையில் இருந்து வெளியேறினார்.

இப்படித்தான் அறங்கூற்றுவர் களிடையே பிரச்சனை உருவாகி இப்போது பூதாகமராக வெடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,665

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.