Show all

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திடக் கூடாது: வைகோ, திருமாவளவன்

கல்வித் துறையை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திடக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

வைகோ:

டிசம்பர் 15 முதல் 18-ஆம் தேதி வரை கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடக்கும் உலக வர்த்தக நிறுவன உறுப்பு நாடுகளின் 10-ஆவது வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் கையெழுத்திடுவதற்கு வர்த்தக அமைச்சர் செல்ல இருக்கிறார். இதில், கையெழுத்திட்டால் நமது கல்விக் கொள்கை அயல்நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும். எனவே கல்வியைச் சந்தைப் பொருளாக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முடிவை பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும்.

திருமாவளவன்:

கல்வி, மருத்துவ துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதாவது கல்வியை வணிகப் பொருளாக்கி விற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டு இந்திய அரசு கையெழுத்திட இருக்கிறது. இதில் கையெழுத்திட்டால் கல்வி உதவித் தொகை, இடஒதுக்கீடு முறை ரத்தாகும். நடுவண் அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.