Show all

இன்று இந்தியாவின் 73வது விடுதலை நாள்!

இந்தியாவை ஆண்டு வந்த பிரித்தானிய அரசு நாளது 30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5049 ல் இந்தியாவிற்கு விடுதலையை அறிவித்தது. அன்று கொண்டாடிய விடுதலை நாளைத் தொடர்ந்து, இன்று அறுபது நாழிகைப் பொழுதும் நாம் கொண்டாட விருக்கிற விடுதலை நாள் எழுபத்தி மூன்றாவது விடுதலை நாள் ஆகும். 

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரும்பான்மை அடிப்படையில் சொல்ல வேண்டுமானால், நடுவண் அரசுக்கு தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தது திராவிட முன்னேற்றக் கழகத்தை. தமிழக ஆட்சிக்கு தேர்ந்தெடுத்தது செயலலிதா அவர்களை. அதே பெரும்பான்மை அடிப்படையில் நடுவண் அரசில் பாஜகவின் மோடியும், தமிழக அரசில் செயலலிதா அவர்களுக்காக தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு குளறுபடிகளுக்கு இடையில் தேர்ந்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவை ஆண்டு வந்த பிரித்தானிய அரசு நாளது 30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5049 ல் இந்தியாவிற்கு விடுதலையை அறிவித்தது. அன்று கொண்டாடிய விடுதலை நாளைத் தொடர்ந்து, இன்று அறுபது நாழிகைப் பொழுதும் நாம் கொண்டாட விருக்கிற விடுதலை நாள் எழுபத்தி மூன்றாவது விடுதலை நாள் ஆகும். 

இந்த நாளில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி தில்லி செங்கோட்டையில் இந்தியநாட்டுக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். 

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் இந்தியநாட்டுக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. தலைநகரம் அல்லோகல்லோலப்பட்டது. தண்ணீருக்கு- தங்கம் அளவிற்கு விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்ததால் சென்னை மக்களின் சேமிப்பு கரைந்து போனது. ஆனால் இயற்கையின் அறங்கூற்றுத் தீர்ப்பால் காவிரி கரைபுரண்டோடி மேட்டூர் அணையில் அதன் கொள்ளளவை எட்டியிருக்கிறோம். சென்னையிலும் கொஞ்சம் மழை பொழிந்து காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை கொஞ்சமாக அகன்றிருக்கிறது.

நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிற உறுப்பினர்கள் தமிழில் உறுதி மொழியேற்று நம்பிக்கை ஊட்டியிருக்கிறார்கள். நமது கல்வி உரிமையை, தொழில் உரிமையை, நமது வேளாண்மையை மீட்டெடுப்பதற்காக- நீட், மீத்தேன், நியூட்ரினோ, கார்ப்பரேட்டுகள் அகியவற்றிலிருந்து விடுதலை பெற்றுத் தருவார்கள் என்று இந்த விடுதலை நாளில் நம்புவோமாக! 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,245.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.