Show all

நடுவண்அரசில், பாஜக ஆட்சி இழப்பிற்கு குஜராத் தேர்தல் முன்னோட்டமாக அமையுமா

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி மாநில மக்களுக்கு உப்புசப்பு இல்லாத சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பகல் கனவில் மிதக்கிறார். உலகச் சுற்றுலாவே குறியாய் இருந்த மோடி, தற்போது உள்நாட்டுச் சுற்றுலாவாக குஜராத்தை மட்டும் தெரிவு செய்து பயணித்து வருகிறார். உழவர்களுக்கு வட்டியில்லா கடனாம், (கொடுத்தால் தானே) இலவச மருத்துவமாம் இவைதாம் பாஜகவின் மக்களுக்குச் சலுகைகள்.

குஜராத் மாநிலத்திற்கு இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான கனவுப்பணிகளில் முழுமையாக இறங்கி உள்ளது பா.ஜ.க. கடந்த 4 முறையும் அங்கு பா.ஜ.க தான் ஆட்சி செலுத்துகிறது. அதனால், இந்த முறையும் வெற்றி பெற முடியும் என்று தீவிரமாக நம்புகின்றனர்.

பா.ஜ.க. தேர்தல் நாள் அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்று உப்புசப்பு இல்லாத சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு எதிர்க்கட்சிகளை மிரட்ட நினைக்கிறார் குஜராத் முதல்வர்.

குஜராத் மாநிலத்துக்கும், ஹிமாச்சல் பிரதேசத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், ஹிமாச்சலில் தேர்தல் நாள் அறிவித்து, வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது. நவம்பர் முதல் வாரத்தில் தேர்தலும் வந்துவிட்டது. இன்னமும் குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் நேற்று சாடி இருந்தார்.

பா.ஜ.க தலைவர் இருவருக்கும் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த முறை வெற்றி பெற்றாக வேண்டுமே என்கிற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தலையாயத் தலைவர்களையும் முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பா.ஜ.க மீது சில அரசியல் நடவடிக்கைகளால் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். மிகப்பெரிய ஓட்டு வங்கியான பட்டேல் சமூகமும் விரக்தியில் இருக்கிறது. இந்த சூழ்நிலைகளால் காங்கிரஸ் அங்கு வலுப்பெற்று வருகிறது.

நடுவண் அரசில் ஆட்சி இழப்பிற்கு குஜராத் தேர்தல் முன்னோட்டமாக அமைந்து விடக் கூடாதே என்கிற நடுக்கத்தில் இருக்கிறார் மோடி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.