Show all

நடுவண்அரசு மாநிலஅரசுகளின் டெங்கு கொசுப் பண்ணைகள்

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெங்கு காய்ச்சலுக்கு, தமிழகத்தில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வரும் நிலையில், வீடுகளை விட அரசு அலுவலகங்களில் தான் 60விழுக்காடு டெங்கு கொசுக்கள் உள்ளன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய பொது நலவாழ்வு நிறுவனத்தின் தமிழக கிளை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், நடுவண் அரசின் தொடர்வண்டி நிலையங்களில், மாநில அரசு கட்டிடங்களில் வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பை, நெகிழிப் பொருட்கள் போன்றவற்றில் இருந்து டெங்கு கொசுக்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ள நிலையில்-

  • அரசும் மாநில அரசும் டெங்கு கொசுப் பண்ணைகளே நடத்தி வருவது ஆய்வில் தெரிய வருகிறது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியப் பொதுச் நலவாழ்வு நிறுவனத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் எங்கே அதிகம் உற்பத்தியாகின்றன என்பதே அந்த ஆய்வு.

இந்த ஆய்வில் பூச்சியியல் வல்லுநர்கள், பொது நலவாழ்வு வல்லுநர்கள், நோய் வல்லுநர்கள், களப் பணியாளர்கள் எனப் பத்துப் பேர் இடம் பெற்றனர். கிட்டத்தட்ட ஒரு வார காலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1025 வீடுகள், 625 அரசு கட்டிடங்களில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்வண்டி நிலையம், மருத்துவமனை, பள்ளிகள், நகராட்சி அலுவலகம், உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றது.

பல அரசு இடங்களில் நடத்திய ஆய்வில், தொடர்வண்டி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் தான் 60 விழுக்காடு கொசுக்கள் உற்பத்தியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு கட்டிட வளாகங்களில் குவிந்து கிடக்கும் நெகிழி பைகள், குவளைகளில் இருந்து டெங்கு கொசுக்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவில், வீடுகளைவிட அரசு கட்டிடங்களிலும், தேசிய மாநில நெடுஞ்சாலைகளிலும், கொசு உற்பத்தி உருவாகக்கூடிய தண்ணீர் தேங்கும் பொருட்கள் 27.7 விழுக்காடு இருப்பது தெரியவந்துள்ளது.

வீடுகளில் தற்போது இது கட்டுப்படுத்தப்பட்டு 5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பொது நலவாழ்வு நிறுவனத்தின் தமிழகக் கிளையின் தலைவர் முனைவர் இளங்கோ, கிரானைட் குவாரிகள், பாறைக் குழிகள் போன்ற மக்கள் போக முடியாத இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. அரசு கட்டிடங்களில் 40 விழுக்காடு டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகின்றன.

வீடுகளில் கொசு உற்பத்தி குறைந்துவிட்டது. பொது இடங்களில் கொசு உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளது. தொடர் வண்டி நிலையங்கள், யார்டு பகுதியில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாவது ஆய்வில் தெரியவருகிறது. இந்த இடங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்துத் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் வண்டி நிலையங்களில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேவையற்ற பொருட்கள் அரசுக் கட்டிடங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். பயனற்றுக் கிடக்கும் வாகனங்கள், தேவையற்ற பொருட்களை அகற்றினால் 15 நாட்களுக்குள் டெங்கு உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும். தொடர் வண்டித் துறை இவற்றைச் செய்யாமல் டெங்குவைக் கட்டுப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

பொதுவாகவே அரசு அலுவலகங்களில் குப்பைகள், ஓட்டை உடைசல்கள் அதிகமாகவே குவிந்திருக்கும். இதேபோல தொடர் வண்டி நிலையங்களில் அதிகம் குப்பைகள் காணப்படும். இந்த குப்பைகள்தான் கொசு உற்பத்தி பண்ணைகளாகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.