Show all

மேற்கு வங்காளத்தில் 6-வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம்! முக்கோணச் சிக்கல்: மருத்துவர்கள்- நோயாளிகள்- அரசுகள்

மேற்கு வங்காள மாநிலத்தில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்கள். பிரச்சனையின் மூலம் அறியமுடியாமல் தடுமாறும் மாநில அரசு. மாநில அரசுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைக்கு, மூன்றாம் தரப்பின் முன்னிலை தேவைப்படுகிற நிருவாகச் சிக்கல்.

02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மேற்கு வங்காளத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி மருத்துவர்களைக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதனைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த ஆறு நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அரசின் கோரிக்கையை மருத்துவர்கள் நிராகரித்து விட்டனர்.

இதனிடையே இன்று காலை முதல் 24 மணிநேரம் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய மருத்துவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களும்; போராட்டத்தில் குதித்தனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள சுமார் 300 மருத்துவர்கள் தங்கள் பணியை விட்டு விலகியுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்கள் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்துள்ளனர். பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மம்தா எங்கு அழைத்தாலும் செல்லத் தயாராக இருக்கிறோம், ஆனால் பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என போராடும் பயிற்சி மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

நீட் தேர்வில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களே பயிற்சி மருத்துவர்கள் என்ற நிலையில்- பொதுமக்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்குமான இடைவெளிக்கு- மொழி, கலாச்சாரங்கள், அணுகுமுறைகள், மாணவர் தேர்வில் நடுவண் அரசு - நடப்பு நிருவாகத்தில் மாநில அரசு என்று இரட்டை நிருவாகங்கள் ஆகியன காரணிகளாக அமைந்திருக்கின்றன. இதிலே ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல- அறங்கூற்று மன்றமும், நடுவண் அரசும் கூட பங்கேற்று, மாநில நிருவாகத்தை மாநிலமே பார்த்துக் கொள்ளுமாறு அமைப்பு நிலவும் போது மட்டுமே இது போன்ற சிக்கலை உடனடியாகக் களையவும் நிரந்தரமாகத் தீர்க்கவும் முடியும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,186.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.