Show all

பாகிஸ்தானை வென்று சரித்திரத்தை தொடர்கிறது இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் உலகமே ஆவலோடு எதிர்நோக்கிய பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் மிகச்சசிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு அருமையான ஒரு தொடக்கத்தை கொடுத்தனர். இந்திய அணி 136 ரன்களை எட்டிய போது லோகேஷ் ராகுல் 57 ரன்களில் (78 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்)  ஆட்டமிழந்தார். உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை இவர்கள் படைத்தனர். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் நேர்த்தியாக விளையாடினார்.  

சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா தனது 24-வது சதத்தை நிறைவு செய்து 140 ரன்களில் (113 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். இந்திய அணி 46.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் 45 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதையடுத்து இந்திய அணி சிறிது தடுமாறியதால் 350 ரன்களை தண்டு என்று எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் இந்திய வீரர்கள் 38 ரன்கள் மட்டுமே எடுத்தனர். விஜய் சங்கர் 15 ரன்னுடனும் (15 பந்து), கேதர் ஜாதவ் 9 ரன்னுடனும் (8 பந்து) களத்தில் இருந்தனர். 

அடுத்து கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மெதுவாகவே ஆடினர். பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் -லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் 40 ஓவர்களில் 302 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது 30 பந்தில் 136 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இறுதியாக பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரத்தை தக்கவைத்து கொண்டது. 

இந்த ஆட்டத்தில் இந்திய பவுலர் புவனேஷ்வர்குமார் தனது 3-வது ஓவரில் காயமடைந்ததால் அந்த ஓவரில் எஞ்சிய 2 பந்துகளை விஜய் சங்கர் வீசினார். விஜய் சங்கர் வீசிய முதல் பந்திலேயே இமாம் உல்-ஹக் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட்டின் அறிமுக ஆட்டத்தில், தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் படைத்தார். உலகளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 4-வது வீரர் ஆவார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.