Show all

தேவைப்பட்டால் ராணுவத்தைக் கூட பாதுகாப்புக்கு அழைக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

தேவைப்பட்டால் ராணுவத்தைக் கூட பாதுகாப்புக்கு அழைக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறியுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த மாதம் 14ம் தேதி தலைமை நீதிபதியின் விசாரணை அறையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர்.   

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பிற்குச் சுதந்திரமான மத்திய போலீஸ் படையை நியமிக்க வேண்டும். இது குறித்து நடுவண், மாநில அரசுகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகப் போலீசின் பாதுகாப்பே சென்னை உயர் நீதிமன்றத்துக்கு போதுமானது. எனவே, மத்திய படை பாதுகாப்பு தேவையில்லை என்று அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.

அதேநேரத்தில், நடுவண் உள்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர் நீதிமன்ற தேவையின்  அடிப்படையில் 650 தொழில் பாதுகாப்பு படை வீரர்களை பணியில் ஈடுபடுத்த  ஆண்டுக்கு ரூ.32 கோடியே 73 லட்சம் தேவைப்படும். ஆறு மாதங்களுக்கு இந்த  வீரர்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்கு ரூ.16 கோடியே 60 லட்சம் தேவைப்படுகிறது.  இந்தத் தொகையைத் தமிழக அரசு தரும் பட்சத்தில் உடனடியாக நடுவண் தொழில்  பாதுகாப்பு படையை நடுவண் அரசு அனுப்பும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்பின் வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

நவம்பர் 16ம் தேதி முதல் உயர் நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் நடுவண் அரசு கோரும் ரூ.16 கோடியே 60 லட்சத்தை 7 நாட்களுக்குள் தமிழக அரசு தரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கள் கிழமை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் 900 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மூன்று முறைப்பணிகளில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பாதுகாப்பு பணிக்காக ரூ.5 கோடியே 50 லட்சம் செலவில் பல்வேறு பாதுகாப்பு சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்துக்கு தமிழக போலீசாரால் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு என்பது தேவையற்றது. எந்த விதத்திலும் பொருத்தமாக இருக்காது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றை யார் தீர்த்து வைப்பது?

நீதிமன்ற வளாகத்திற்குள் பிரச்னை ஏற்பட்டால் யார் வழக்கு பதிவு செய்வது போன்ற சிக்கல்கள் உள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையைக் கொண்டு வருவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் நாகேஷ்வரராவ் ஆஜராகி, கடந்த 6 மாதங்களாக உயர் நீதிமன்றத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. கடந்த 2009ல் உயர் நீதிமன்றத்தில் நடந்த போலீஸ் தடியடி பிரச்னையின்போது போலீசார் உயர் நீதிமன்றத்திற்குள் வரக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபோன்ற சூழ்நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது. தற்போது, எந்தப் பிரச்னையும் இல்லாத நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உயர் நீதிமன்றத்திற்கு தேவையில்லை என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள்,

உங்களுக்கு என்ன பிரச்னை அதை முதலில் சொல்லுங்கள். மத்திய தொழில் பாதுகாப்பு படை கேட்கும் தொகையைக் கட்டுவதில் பிரச்னையா அல்லது அந்த பாதுகாப்பை விரும்பவில்லை என்ற பிரச்னையா?

நீதிபதிகள் அச்சமில்லாமல், பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தலைமை நீதிபதி அறையில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கையில் தடியுடன்  மாநில போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அசாதாரணமான சூழ்நிலையில் மத்தியப் படையை பாதுகாப்புக்கு அனுப்புவதில் என்ன பிரச்னை உள்ளது. மொழிப்பிரச்னை என்பது உங்கள் பிரச்னை அல்ல. நீதித்துறை மரியாதையுடன் செயல்பட வேண்டும். பாதுகாப்பிற்கு உயர் நீதிமன்றம் நினைத்தால் மத்திய தொழில் பாதுகாப்பு படை மட்டுமல்ல, சிஆர்பிஎப் ஏன் ராணுவத்தைக் கூட அழைக்க முடியும். மனுவை வாபஸ் பெறுகிறீர்களா அல்லது தள்ளுபடி செய்யட்டுமா? என்றனர்.

மேலும், உயர் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவதை விட்டுவிட்டு இங்கு எதற்கு வந்தீர்கள் என்றும் நீதிபதிகள் கேட்டனர். இந்தக் கண்டிப்பான பேச்சை கேட்ட தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அப்பீல் மனுவை வாபஸ் பெறுகிறோம் என்றார்.

இதையடுத்து, மனு வாபஸ் பெறப்பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசின் மனுவை விசாரணை நடத்திய நீதிபதி டி.எஸ்.தாக்கூர்தான், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நேற்று பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.