Show all

டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு

அரசு விளம்பர வாகனத்தில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில்,

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கடந்த 4 ஆண்டு சாதனைகளைப் பொதுமக்கள் மத்தியில் விளம்பரம் செய்வதற்காக, தமிழ்நாடு செய்தித்துறை சார்பில் 32 விளம்பர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசால் ரூ20.08 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களில், மிகப்பெரிய அளவிலான திரைகளைக் கொண்ட டி.வி.க்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படமும் மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. வருகிற 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, இதுபோன்ற மலிவான விளம்பரங்களை ஆளும் கட்சியினர் மேற்கொள்கின்றனர்.

எனவே, இந்த விளம்பர வாகனங்களில் உள்ள முதல்அமைச்சரின் புகைபடத்தை அகற்றவேண்டும் என்று கடந்த செப்டம்பர் 30-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன்.

அதில், இந்த விளம்பர வாகனங்கள், வருகிற சட்டசபை தேர்தலுக்கான பிரசார வாகனங்களாக பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறியிருந்தேன்.

ஆனால், தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா நடைபெறும்போது, இந்த விளம்பர வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது.

எனவே, இந்த வாகனங்களுக்கு செய்யப்பட்ட அலங்காரச் செலவுத் தொகையை, தகுந்த சட்டத்தை பின்பற்றி அபராதத்துடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளரிடம் இருந்து வசூலிக்கவேண்டும் என்றும், அவரது புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிடவேண்டும்.

என்னுடைய கோரிக்கை மனுவை பரிசீலிக்கவும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்து, மனுதாரர் கொடுத்துள்ள புகார் மனுவை இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.