Show all

தூய்மைப்பணிக்கு மக்கள் ஒத்துழைக்காவிட்டால் திரும்பிச் சென்றுவிடுவேன்: கிரண்பெடி

புதுவையில் தூய்மைப்பணிக்கு மக்கள் ஒத்துழைக்காவிட்டால் திரும்பிச் சென்றுவிடுவேன் என்று ஆளுநர் கிரண்பெடி ஆவேசத்துடன் பேசினார். புதுச்சேரி ஜிப்மர் மாணவர்கள் சங்கம் மற்றும் அரிமா சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு புதுச்சேரி ஆளுநர் கிரண்பெடி பேசியதாவது: இளைய தலைமுறையினர் நலமாக இருந்தால்தான் நலமான இந்தியாவை உருவாக்க முடியும். நலமற்ற குடிமக்களைக் கொண்டிருக்கும் நாடு வலிமையான நாடாக இருக்க முடியாது. மாணவ, மாணவிகளைப் படிக்க வலியுறுத்தும் அதே வேளையில் விளையாட்டிலும் ஊக்கப்படுத்த வேண்டும். புதுச்சேரி ஆளுநராக பதவியேற்ற நாள்முதல் நான் கிழமை இறுதி நாட்களில் காலை 6 மணி அளவில் நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறேன். தெருக்களை சுத்தப்படுத்துவது ஆளுநரின் வேலை இல்லை. அது நம்முடைய பணி. தெருக்களில் குப்பைகளை போடும் பொதுமக்களுக்கே அவற்றை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பும் உள்ளது. ஆளுநரே வந்து தெருக்களைச் சுத்தம் செய்ய முடியாது. நான் தொடர்ந்து 3 மாதங்களாக பார்வையிட்டு வருகிறேன். தொடர்ந்து நான் உங்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றால் நீங்களும் என்னுடன் இணையவேண்டும். நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் நான் திரும்பிச்சென்று விடுவேன். தூய்மையான புதுச்சேரியை உருவாக்குவது உங்கள் பொறுப்பாகும். சில அதிகாரிகள் என்னுடன் இணைந்து பணிபுரிகின்றனர். ஆனால் சில மூத்த அதிகாரிகள் என்னுடன் பணிபுரிய மறுக்கின்றனர். இளைஞர்கள் தங்கள் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியை ஏற்கவேண்டும். இதை ஒரு இயக்கமாக மாற்றவேண்டும். நான் வேலையில்லாமல் இங்கு வரவில்லை. எனக்கு பல்வேறு பணிகள் உள்ளன. எனக்கு 2 தொண்டு நிறுவனங்களும் உள்ளன. பல கல்லூரிகளில் கற்பிக்கும் பணியும் உள்ளது. நான் வீட்டைவிட்டு இங்கு சேவை புரிய வந்துள்ளேன். நான் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்று நினைத்தால் அது தவறாகும். குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள், விலங்குகளின் உடல்கள் கிடக்கின்றன. இதனால் சுற்றுப்புறச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இப்போது மழைக்காலம் வர உள்ளது. இதனால் ஏற்படும் வௌ;ள பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்கவேண்டும். நான் தொடர்ந்து இங்கு இருக்கப்போவதில்லை. நான் ஒரு நோக்கத்துக்காக வந்துள்ளேன். அது நிறைவேறவில்லையென்றால் திரும்பி விடுவேன். அரசே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது தவறானதாகும். குப்பைகளைத் தெருவில் வீசுவோரை நீங்களே தடுத்து நிறுத்த வேண்டும். சில கிழமைகளில் பொதுமக்கள் தூய்மைப்பணிக்கு வரவில்லை என்றால் நான் எனது உடமைகளுடன் திரும்பச் சென்றுவிடுவேன். எனது அடுத்த ஆய்வின்போது கண்டிப்பாக அமைச்சர், அதிகாரிகள் உடனிருக்க வேண்டும். தூய்மைப்பணிக்கு வருவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளின் கடமையாகும். நீங்கள்தான் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்கிறீர்கள். அவர்களைக் கேள்வி கேட்கவேண்டியது உங்களின் கடமையாகும். காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்கள் தூய்மைப்பணியில் சிறப்பாக உள்ளன. ஆனால் புதுச்சேரி பின்தங்கி உள்ளது. ஆளுநர் மாளிகை என்பது எனது வீடல்ல. அது அலுவலகம். அதனால்தான் அதை மக்களுக்காக திறந்துவிட்டுள்ளேன். உங்களுக்கு நான் கால அவகாசம் தருகிறேன். தூய்மை பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் அக்டோபர் மாதம் நான் சென்றுவிடுவேன். இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.