Show all

மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. எனவே, தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும். தென்தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையோ கனமழையோ பெய்யக்கூடும்.

வடகடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை உட்பட கழிமுக மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை விட்டுவிட்டு பெய்யும் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். தென்தமிழகக் கடலோர மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது எச்சரிகையாக இருக்க வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக செங்கல்பட்டில் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது

என்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.