Show all

அன்றும் இன்றும் என்றும் நடுவண் அரசு இந்தித் திணிப்பு அரசே

நடுவண் அரசு பள்ளிகளில் சமஸ்கிருத மொழியை திணிக்க நடுவண் அரசு மீண்டும் முயலுகிறது என்று கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பேசிய நடுவண் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,

பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்காக  வேதங்களுக்கு என்று வேதிக் போர்டு என்ற தனிப் பிரிவு ஜூன் 16ம் தேதி துவங்கப்படும். நமது கலாச்சாரம் என்பது வேதங்களில் ஊறியுள்ளது. வேதங்களைப் பயிலாமல் நமது கலாச் சாரத்தை நாம் முன்னிறுத்த முடியாது. ஆகவே நடுவண் அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல்  வேதப் பாடங்கள் பயில சிறப்பு வேத பாட போதனை பிரிவு (வேதிக் போர்டு) உருவாக்கப்படும். இந்த வேதப் பாடப் போதனைப் பிரிவுக்கு வேதாஞ்சலி என்று பெயர் வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

பாஜக அரசு 2014ம் ஆண்டில் அமைந்ததற்குப் பிறகு, அடிப்படைவாதமான இந்துத்வாவினை எய்துவதற்கு உகந்த பாதையாக சமஸ்கிருத மொழியைத் திணிப்பதில் வேண்டுமென்றே  பிடிவாதமாக இருக்கிறது. நடுவண் அமைச்சர்களில் ஒரு சிலரும், அவர்களுக்குத் துணையாக சில அதிகாரிகளும் இணைந்து சமஸ்கிருத மொழி திணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்தியாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தும் மொழியாக சமஸ்கிருதம் இருந்து வருவதை அனைவரும் அறிவர். சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிகளில் ஒன்றாக, இந்தியா முழுவதும் நடுவண் அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. போன்ற கல்விக் கூடங்களில் வரும் கல்வியாண்டு முதல் (2016-2017), சமஸ்கிருதம் 3ம் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்று நடுவண் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 

டெல்லியில் இதே நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் நடைபெற்ற கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்திருக்கிறார்கள். அப்போது நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும் போது, ஆங்கில மொழி மற்றும் மாநில மொழிகள் (தாய்மொழி) மாணவர்களுக்குத் தேவையாக  இருப்பினும் நமது பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதம் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும். தற்போது நடுவண் அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருமொழிப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 3ம் மொழிப் பாடமாக  சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். ஆகவே வரும் கல்வியாண்டு முதல்  (2016-2017) நடுவண் அரசின் கீழ் வரும் அனைத்துக் கல்வி  நிலையங்களிலும் கட்டாயப் பாடமாக  சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படும்.  மேலும் வரும் ஆண்டுகளில் 8ம் வகுப்புக்கு மேல் 12ம் வகுப்பு வரை சமஸ்கிருத கல்வியைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

 

நடுவண் அமைச்சரின் இந்த அறிவிப்பிலிருந்து, முதலில் வடமொழித் திணிப்பு, அடுத்து கலாச்சாரத் திணிப்பு தொடர்ந்து இந்தியாவில் அரங்கேற உள்ளன என்ற நோக்கம் வெளிப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு குறித்து ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பேட்டியளித்த போது இதே கருத்தினைத் திரும்பவும் கூறியதோடு, மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சமஸ்கிருத மொழி நூல்களும் விரைவில் அச்சிடப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்கள். இதே நடுவண் அமைச்சர், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழியை அறிவிப்பதற்காக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டப் போவதாக ஒருமுறை தெரிவித்தார். ஐ.நா. சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக, இந்தியை அறிவிக்க, 129 நாடுகளின் ஆதரவு தேவை. அந்த 129 நாடுகளின் ஆதரவைத் திரட்ட, இந்தியா முயற்சித்து வருவதாக சுஷ்மா சுவராஜ் கூறினார்.

ஐ.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை அறிவித்தால் அதற்காகச் செலவாகும் சுமார் ரூ.270 கோடியை இந்திய அரசு ஏற்கத் தயாராக இருப்பதாகவும்; இதில் செலவு ஒரு பொருட்டே அல்ல என்றும் சுஷ்மா அறிவித்தார்.

     பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்களைக் கொண்ட மக்கள் வாழும் நம் நாட்டில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சமமாகக் கருதப்பட வேண்டும்.

அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு வழங்கப்படவேண்டும். அப்போதுதான் நாட்டின் கூட்டாட்சி வலுப்பெற்று, அனைவருக்குமான குடியரசு என்பது உறுதி பெறும். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும், அதாவது அரசியல் சட்டத்தின் 8ம் அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளையும் மத்தியில் ஆட்சிமொழிகளாக அறிவிக்க வேண்டும் என்ற நமது அரை நூற்றாண்டு காலக் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வரும் நடுவண் அரசு, இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு  வக்காலத்து வாங்குவதுதான் சமநீதியா?

 

பாஜக அரசு மத்தியில் அமைந்ததற்குப் பிறகு இந்தி மொழி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்பு நடவடிக்கைகளில் திடீர் வேகம் காட்டப்பட்டு வருகிறது. நடுவண் அரசுப் பள்ளிகளில் 3ம் மொழி யாகக் கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழி அகற்றப்பட்டு, சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது. சமஸ்கிருத வாரம், இந்தி வாரங்கள் தாராளமாகக் கொண்டாடப்படுகின்றன. வழக்கொழிந்துபோன சமஸ்கிருத மொழியில் சிறப்புச் செய்திகள் வாசிக்க அரசு நிறுவனமான தூர்தர்ஷனில் அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. மொழி வெறி கலாசார வெறி அடிப்படை யிலான இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகள் நாட்டை வளர்ச்சிப் பாதையிலிருந்து தடம் புரளச் செய்வதோடு, இந்திய மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து  கவனத்தைத் திசை திருப்பிச் சிதைத்திடும் பேரபாயத்தையும் ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.