Show all

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவா முதல்வராக பாஜகவின் மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் காலமானர். மூன்று முறை கோவா முதல்வராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் 63 அகவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பனாஜியில் உள்ள தன் இல்லத்தில் காலமானர். அவருக்கு தலைவர்களும் பிரபலங்களும் பொதுமக்களும் இரங்கல் தெரிவிக்கிறார்கள். 

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பினார். அதன்பிறகு, இரண்டுமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை  எடுத்துக்கொண்டார். இருப்பினும் அவருக்கு உடல்நிலை சரியாகாமல் இருந்து வந்தது. இருப்பினும் சிகிச்சை எடுத்துக்கொண்டே அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த வரவு-செலவுக் கூட்டத்தொடரில் கூட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கலந்துகொண்டிருந்தார். 

வரவு-செலவுக் கூட்டத்தொடருக்கு பின் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் மீண்டும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரம் முன்பு உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து பாஜக தலைவர்கள் கோவா விரைந்து உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'தனது நோயை எதிர்த்து ஓர் ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது' எனக் கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,094.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.