Show all

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆவேசக் குற்றச்சாட்டு! தலித்துகளுக்கு எதிரானவராம் மோடி; மக்களும் ஆம் என்கின்றனர்

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்: 'தலித்துகளுக்கு எதிரானவர் தலைமைஅமைச்சர் மோடி; அவரை அதிகாரத்திலிருந்து மக்கள் தூக்கியெறிய வேண்டும்' என்று பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆவேசமாகப் பேசினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பீம் ஆர்மி அமைப்பு போட்டியிடவுள்ளது. இந்நிலையில் பீம் ஆர்மி அமைப்பின் பேரணி, பொதுக்கூட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் திடலில் நேற்று நடைபெற்றது. அப்போது அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேசியதாவது: 

நான் வரும் மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் போட்டியிடப் போகிறேன். அங்கு மக்களின் ஆதரவு எனக்குத் தேவை. அப்போதுதான் தலைமைஅமைச்சர் மோடியை தேர்தலில் தோற்கடிக்க முடியும்.

தலைமைஅமைச்சர் மோடி, தலித் மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவரைப் பதவி, அதிகாரத்திலிருந்து மக்கள் தூக்கியெறியவேண்டும்.

 

தலித் மக்களின் எதிரியான அவர் தண்டிக்கப்படவேண்டும். ஜனநாயகத்தில் மக்கள்தான் தலைமையானவர்கள் என்பதை தலைமைஅமைச்சர் மோடி புரிந்துகொள்ளவேண்டும்.

வாரணாசியிலிருந்து போட்டியிடப் போகிறேன் என்று நான் அறிவித்ததுமே, கும்பமேளாவில் பணிபுரிந்த துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களை மோடி சுத்தம் செய்து நடிக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தியாகத்தை மக்கள் வாக்களிக்கச் செல்லும் முன்பு நினைத்துப் பார்க்கவேண்டும். தேர்தலில் நீங்கள் (மோடி) எளிதில் வெற்றி பெற நான் விடமாட்டேன்.

நான் அரசியல்வாதியாக இருக்க விரும்பவில்லை. சாமானிய மக்களின் மகனாக போட்டியிட விரும்புகிறேன். உங்களை (மோடி) மீண்டும் குஜராத்துக்கே திரும்பச் செய்வதற்கு யாராவது ஒருவர் தேவை. அந்த பொறுப்பிற்கு மக்கள் எனக்கு உறுதியாக ஒத்துழைப்பார்கள் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிலையில் ஒரு இயங்கலை இதழ்: தலித்துகளுக்கு எதிரானவர் தலைமைஅமைச்சர் மோடி; அவரை அதிகாரத்திலிருந்து மக்கள் தூக்கியெறிய வேண்டும், என்று பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் கூறியிருப்பது குறித்து மக்கள் கருத்தறிய நடத்திய கருத்துக் கணிப்பில்-  

ஏற்புடையது என்று 76 விழுக்காட்டினரும், ஏற்புடையதல்ல என்று 20 விழுக்காட்டினரும், விவாதத்துக்குரியது என்று 4 விழுக்காட்டினரும் இதுவரை வாக்களித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,094.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.