Show all

மன்னர் காலத்து நடைமுறை தெலுங்கானா அமைச்சர் காலத்தில்

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றும் பார்ப்பனர்களைத் திருமணம் செய்ய பெண்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு வருமானம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தெலுங்கானா மாநில பிராமண நலவாரிய தலைவரும், முதல்வரின் ஆலோசகருமான ரமணாச்சாரி கூறியதாவது:

கை நிறைய சம்பாதிக்கும் ஆண்களையே பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். கோவில் அர்ச்சகர்களுக்கு ஊதியம் குறைவாக கிடைப்பதால் அவர்களைத் திருமணம் செய்து கொள்ள பெண்கள் தயங்குகிறார்கள். இதனால் அர்ச்சகர்களுக்கு திருமணம் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது. பலர் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்காக தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், ‘கல்யாண மஸ்துஎன்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளார்.

இதன்படி பிராமண வகுப்பை சேர்ந்த கோவில் அர்ச்சகர்களைத் திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்கப்படும். திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி பெயரில் அரசு வங்கியில் ரூ.3 லட்சம் வைப்பு செய்யப்படும். இந்தப் பணத்தை அவர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தத் திட்டம் வருகிற 15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119. (01.11.2017) முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-மன்னர் காலத்து நடைமுறை அமைச்சர் காலத்திலும் தொடங்கப் பட்டுள்ளது. விளையப் போவது என்னவென்று பார்ப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.