Show all

தோண்டியெடுக்கப் படுகிறது, போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்

இன்று 02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து அமெரிக்காவின் பேர்பேக்ஸின் தலைவர் மைக்கேல் ஹெர்ஷ்மாம் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப் போவதாக நடுவண் புலனாய்வுச் செயலகம் தெரிவித்துள்ளது.

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி மைக்கேல் ஹெர்ஷ்மாமிடம் பேட்டி எடுத்திருந்தது. இந்த பேட்டி கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்டது.

இப்பேட்டியில், போபர்ஸ் பீரங்கி பேர கொள்முதலுக்காக லஞ்சமாக பெறப்பட்ட பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டன. 1986-ல் இந்தியாவின் தலைவர்களது சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க அப்போதைய நிதி அமைச்சர் வி.பி.சிங் எனக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இந்த விசாரணையை முடக்க ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசு முயற்சித்தது என கூறியிருந்தார்.

இப்பேட்டி வெளியான நிலையில் நடுவண் புலனாய்வுச் செயலகம் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஹெர்ஷ்மாம் அளித்த பேட்டி விவரங்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவர் தெரிவித்த கருத்துகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-போபர்ஸ் அவதூறு இந்தியாவில் 1980 இல் நிகழ்ந்த மிக தலையாய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்சு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் வாங்கியதில் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் 1989 தேர்தலில் தோல்வியைக் கண்டது.

இந்த அவதூறு குற்றச்சாட்டின் இந்திய மதிப்பு 64 கோடி இந்திய ரூபாய்களாகும்.

இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்பொழுது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த வி. பி. சிங். இது பத்திரிகைகளில் சித்ரா சுப்பிரமணியம் மற்றும் என். ராம் போன்ற பத்திரிகையாளர்களால் இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் மூலம் வெளியானது.

இந்த ஊழலுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர் இத்தாலியத் தொழிலதிபரான ஒத்தோவியோ குவாத்ரோச்சி. இவர் இராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமானவர்.

இதன் வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் இராஜிவ் காந்தி மே 21, 1991 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.