Show all

உலகின் மையமாகத் திகழப் போகிற புதிய சகாப்தத்தில் சீனா நுழைந்துள்ளது: ஷி ஜின்பிங்

இன்று 02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சீனாவின் அரசியல், பொருளாதாரப் பாதையைத் தீர்மானிக்கும், அதிகாரம் மிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பலத்த பாதுகாப்புக்கு நடுவே தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆளமுடியும் என்பதால் இந்தக் கட்சி மாநாடு மிகுந்த தலையாயத்துவம் வாய்ந்தது.

மாநாட்டில் பேசிய ஷி ஜின்பிங், ‘இந்தப் புது யுகத்தில் சீனப் பண்புகளோடு கூடிய சோஷியலிசம் நாட்டை உலகில் பெரிய சக்தியாக்கி இருக்கிறது,’ என்றார்.

தமிழ்தொடர்ஆண்டு-5152. (2050) வாக்கில் ‘சோஷலிச நவீனமயமாக்கலை’ அடைய இரண்டு கட்டத் திட்டம் ஒன்றை விவரித்த ஷி, பிரிவினை வாதத்துக்கு எச்சரிக்கைவிடுத்தார்.

ஷின்ஜியாங், திபெத், ஹாங்காங் ஆகிய பகுதிகளில் தோன்றியுள்ள இயக்கங்களைக் குறிக்கும் வகையில் அவரது எச்சரிக்கை அமைந்திருந்தது. தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்ற அரசின் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார் ஷி.

அதே நேரம், உலகத்துடனான தமது கதவுகளை சீனா மூடிக்கொள்ளாது என்று கூறிய ஷி, வெளிநாட்டு மூதலீட்டாளர்களுக்கான தடைகளை குறைப்பது உள்ளிட்ட மேலதிக பொருளாதார சீர்திருத்தங்கள் வரும் என்று உறுதியளித்தார்.

கட்சிக்குள் தாம் மேற்கொண்ட மாபெரும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட அலுவலர்கள் தண்டிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

அந்த நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டபோது அரங்கில் பெரும் கைத்தட்டல் எழுந்ததாக ஒரு கீச்சுப் பதிவு குறிப்பிடுகிறது.

2,000 கட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமே இந்த மாநாட்டு அரங்கில் அனுமதி உண்டு. 2012-ம் ஆண்டு நடைபெற்ற இதே போன்ற மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ஜின்பிங் தமது அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டார். எனவே, அவரே மீண்டும் தலைவராக நீடிக்கவே வாய்ப்பு உள்ளது.

அடுத்தவாரம் இம்மாநாடு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு முடிந்தவுடன், கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் நிலைக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் பெயர்கள் வெளியிடப்படும். இக்குழுவே நாட்டுக்கான முடிவுகளை எடுக்கும் உயர்மட்டக் குழுவாக இருக்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.