Show all

தவறாகிப்போன பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மோடி மன்னிப்பு கோர வேண்டும்: கமல்

இன்று 02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வரலாறுகாணாத தவறாகிப் போன பணமதிப்பு நீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தது தவறு; அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தையே படு கேவலமாக சிதைத்து விட்ட தான் மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மோடியும் தமது தவறை ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஆனந்த விகடன் வார இதழில் என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தொடரை கமல்ஹாசன் எழுதி வருகிறார். இந்த வாரம் தொடரில் பணமதிப்பு நீக்கம் குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:

பணமதிப்பு நீக்கம் பற்றி மாண்புமிகு தலைமை அமைச்சர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று கீச்சுவில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில் முழு ஆதரவையும் அத்திட்டத்திற்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன்.

ஆனால், என் சகாக்கள் பலரும், பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள். கொஞ்சநாள் கழித்து, பணமதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

அதற்கும் பிற்பாடு பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன்.

தற்போது யோசனையே கபடமானது என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்திற்குப் பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்காமல் தவறை ஒப்புக்கொண்டால், தலைமை அமைச்சருக்கு என்னுடைய இன்னொரு வணக்கம் காத்திருக்கிறது. தவறுகளைத் திருத்தி ஆவன செய்வதும், தலையாயத்துவமாக அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.