Show all

மவுனபாபா என்பது யார் தெரியுமா? நம்ப மோடியாம்! சிவசேனா இதழ் சாம்னா எழுதுகிறது

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் தலையங்கத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், உள்நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசாமல் மவுனமாக இருப்பது குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தலைமை அமைச்சர் மோடிக்கு மௌனபாபா என்று புதிய பெயர் சூட்டியிருக்கிறார்கள். காஷ்மீர் சிறுமி பலாத்காரம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினரால் சிறுபெண் பலாத்காரம் செய்யப்பட்டது போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன.

ஆனால், இதைப்பற்றி உள்நாட்டில் கருத்து தெரிவிக்காமல் மோடி வெளிநாடுகளில் சென்று கருத்து தெரிவித்து வருகிறார். இதனால், யாருக்கு என்ன பயன்?

வேண்டுமென்றால், மோடிக்காகத் தலைநகரை டோக்கியோ அல்லது லண்டன் நகருக்கோ, பாரீஸ் நகருக்கோ, நியூயார்க், அல்லது ஜெர்மனுக்கோ மாற்றிவிடலாம். அது சாத்தியமில்லாவிட்டால் கூட அவரின் அலுவலகத்தையாவது மாற்றிவிடலாம்.

அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் இருந்து வரும் போது பிரதமர் மோடி வெறுங் கைகளோடு திரும்பிவந்து இருக்கிறார். ரூ.9 ஆயிரம் கோடி வங்கிப்பணத்தை மோசடி செய்த விஜய் மல்லையா, வங்கிப்பணத்தை மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி ஆகியோர் லண்டனில்தான் இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, அவர்கள் இருவரையும் நாடு கடத்தும் திட்டம் குறித்தும் எந்த முடிவும் எடுக்காமல் வெறும் கையோடு மோடி வந்துள்ளார். இலண்டனில் இருந்தபோது அது குறித்துதானே அவர் பேசியிருக்க வேண்டும்.

உள்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேசாமல் மவுனமாக இருக்கிறார் என்று முன்னாள் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இதே குற்றச்சாட்டை மோடி, மன்மோகன் சிங் தலைமை அமைச்சராக இருக்கும் போது கூறினார். இப்போது மன்மோகன், மோடிக்குக் கூறிவிட்டார். 

மோடி, மன்மோகன் சிங் அறிவுரைப்படி நடந்து, அதிகமாகப் பேச வேண்டும். இது மன்மோகன்சிங் விருப்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் மோடி முக்கியமான தருணங்களில் கருத்துச் சொல்லவேண்டும், பேச வேண்டும் என எதிர்பார்க்கிறது.

மன்மோகன் சிங் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பாதி அளவு பேசினார். ஆனால் இப்போது இருக்கும் மோடி அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மவுனபாபாவாக இருக்கிறார். ஆனால், வெளிநாடுகளில் சென்று உள்நாட்டு பிரச்சினைகளைப் பேசுகிறார்.

இதேபோன்றுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உள்நாட்டில் அறிவித்துவிட்டு, பிரதமர்மோடி ஜப்பானுக்குப் பறந்துவிட்டார். அங்கிருக்கும் இந்தியர்களிடம் கறுப்புபணம், ஊழல் குறித்து பேசினார்.

ஆனால், இதுகுறித்துப் பேச மோடியின் ஆதரவாளர்கள் முன்வரமாட்டார்கள். ஆனால், மன்மோகன்சிங் இதுகுறித்து பேசத் தொடங்கிவிட்டார், ஆனால், மோடி மவுனமாகிவிட்டார். பாஜகவுக்கு எதிராக விதி எடுத்திருக்கும் பழிவாங்கும் நடவடிக்கை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,764. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.