Show all

கொண்டாடத் தக்கதுதானா! மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரிட்டனை இந்தியா முந்தியுள்ளது

ஒட்டுமொத்த கணக்கீட்டில் பிரிட்டனை விட இந்தியா பெரிய பொருளாதாரமாக மாறுவது பெரிய விடையமே இல்லை. என்பதை தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தெளிவாகவே விளக்கி விடுவான். இதற்குப் பெரிய பெரிய பொருளாதார வல்லுனர்கள் எல்லாம் தேவையே இல்லை என்கிற நிலையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் கொண்டாட்டாத்தில் பொருள் இல்லை என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் கொண்டாடுகின்றனர். 

அண்மைக்கால ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, நடப்பு ஆண்டில்  இந்தியா பிரிட்டனை முந்தியது என்று தெரிவிக்கிறது. இதை சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின் அடிப்படையில் ப்ளூம்பெர்க் இதனை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், 17,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123ல்  (இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில்) இந்தியாவின் பொருளாதாரம் 854.7 பில்லியன் டாலராக இருந்தது. பிரிட்டனின் பொருளாதாரம் 816 பில்லியன் டாலராக இருந்தது.

பிரிட்டனின் மக்கள் தொகை வெறுமனே ஏழு கோடிக்கு குறைவுதான். இந்தியாவின் மக்கள் தொகை தற்போது சுமார் 138 கோடியாக உள்ளது. பிரிட்டனின் மக்கள் தொகை மாதிரி இருபது மடங்கு மக்கள் தொகையைக் கொண்டது இந்தியா. பிரிட்டனின் உள்நாட்டு உற்பத்தி 816 பில்லியன் டாலர் என்றால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதன் இருபது மடங்கான 16320 பில்லியன் டாலர் உள்நாட்டு உற்பத்தி இருந்தால்தான் இந்தியா பொருளாதார வளத்தில் பிரிட்டனுக்கு இணையாகி விட்டது என்று கொண்டாட முடியும்.

ஒட்டுமொத்த கணக்கீட்டில் பிரிட்டனை விட இந்தியா பெரிய பொருளாதாரமாக மாறுவது பெரிய விடையமே இல்லை. என்பதை தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தெளிவாகவே விளக்கி விடுவான் இதற்கு பெரிய பெரிய பொருளாதார வல்லுனர்கள் எல்லாம் தேவையே இல்லை.

இதுகுறித்து, மூத்த இதழியலாளரும் பொருளாதார ஆய்வாளருமான எம்.கே.வேணு தெரிவித்துள்ளதான செய்தியில், பொருளாதாரத்தின் மொத்த அளவில் இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளும். அது உறுதியாக நடக்கும். ஆனால், மக்களின் பொருளாதார நிலைதான் கட்டாயப்பாடு ஆகும். தனியாள் வருமானத்தைப் பொறுத்தவரையில், அது பிரிட்டனில் ஓர் ஆண்டுக்கு 45 ஆயிரம் டாலராக உள்ளது. இதுவே, இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு வெறுமனே 2 ஆயிரம் டாலராக மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதுதான் கவலைப்பட வேண்டிய உண்மையாகும்.

பிரிட்டனோடு இந்தியா என்கிற இந்த ஒப்பீட்டை செய்ய வேண்டுமானால், அதில் தனியாள் வருமானம் பற்றிய தகவல் இருக்க வேண்டும். அந்த அளவில் இந்தியா இன்னும் பிரிட்டனை விட மிக மிக பின்தங்கியுள்ளது. தனியாள் வருமானத்தில் இந்தியா இன்னும் பின்தங்கிய நாடுகளில்தான் உள்ளது. அப்படியிருக்க பொருளாதாரத்தில் இந்தியா பிரிட்டனை முந்திவிட்டது என்று கூறுவது தவறு, என்கிறார் வேணு.

ஜே.என்.யு பேராசிரியரும் பொருளாதார வல்லுனருமான அருண்குமார் தெரிவித்துள்ளதான செய்தியில், இந்தியாவின் மக்கள் தொகை பிரிட்டனை விட இருபது மடங்கு அதிகம். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட அவர்களுக்கு சமமாக இருந்தால், தனிநபர் வருமானத்தில் நாம் இருபது மடங்கு பின்தங்கி இருக்கிறோம் என்றுதான் பொருள். பிரிட்டன் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடுவது சரியல்ல. இந்த ஒப்பீடு தவறானது. இந்தியா மற்றும் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடலாம். ஆனால் இருநாடுகளின் வளமையை ஒப்பிட முடியாது. தனிநபர் வருமானத்தில் பிரிட்டனை விட நாம் மிகமிக பின்தங்கியுள்ளோம்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முறைசார் பிரிவு, அதாவது, கார்ப்பரேட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் முறைசாரா பிரிவு பின்னோக்கி செல்கிறது. இதன் பொருள் நமது பகிர்மானம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என்பதாகும். மேல்தட்டு வர்க்கம் நன்றாக இருக்கிறது. அதன் வருமானம் அதிகரித்து வருகிறது. ஆனால் கீழ்தட்டு வர்க்கம் இன்னும் வறுமையில் உள்ளது. என்பது இந்தியாவில் தொடரும் நிலையாகவே இருந்து வருகிறது என்பது பொருதார வல்லுனர்களின் தொடர் குற்;றசாட்டு ஆகும்.

இந்தியாவில் வேலைவாய்ப்புக்கான இணையதளத்தில், 27.5 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 94விழுக்காட்டினர் மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் போது, முறைசார் ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடைக்கும். ஆனால் முறைசாரா பிரிவில், ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிக்காது. ஒருபுறம், ஊதியம் பெறுபவர்களின் வாங்கும் திறனும் மேலும் குறைந்திருக்கிறது. மறுபுறம் பணகாரர்களின் செல்வம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்த நிலைமையும் மோசமாகி வருகிறது என்பது பொருளாதார வல்லுனர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி, சேவைகள், எண்ணிமப் பொருளாதாரம் அதிகரித்து வருகின்றன. ஆனால், அவற்றின் பலன்கள் எத்தனை பேருக்குச் சென்றடைகின்றன என்பதுதான் வினா! பலரும் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இவர்கள் அன்றாடத் தேவைகளுக்காகப் போராடுகிறார்கள் என்பதை எம்.கே.வேணு. தெரிவித்துள்ளதான செய்தியில் அறியமுடிகிறது.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பு நெருக்கடி மிகவும் தீவிரமாகி உள்ளது. இனி இளைஞர்கள் வேலைக்காக வீதியில் இறங்கி போராட வேண்டி இருக்கும். இதுபோல, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு இன்னும் பல பெரிய சவால்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அருண் குமார் தெரிவித்துள்ளதான செய்தியில், தற்போது இந்தியாவின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய சவால் வேலையின்மை. இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர். இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் முறைசாரா பிரிவில்தான் வேலை பெற வேண்டும். இப்போது முறைசாரா பிரிவும் நலிவடைந்து வருகிறது. வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. என்பதாகும்.

அதே நேரத்தில், வேலைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதும் இந்தியப் பொருளாதாரத்தின் முன் உள்ள அறைகூவலாக உள்ளது.

இதுகுறித்து எம்.கே.வேணு தெரிவித்துள்ளதான செய்தியில், உலக விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவு. 19விழுக்காட்டுப் பெண்கள் மட்டுமே வேலையில் உள்ளனர். உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில், இந்த விழுக்காடு பத்துக்கும் குறைவாகவே உள்ளது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்காவிட்டால், இந்தியப் பொருளாதாரத்தின் முன் பல அறைகூவல்கள் இருக்கும். என்பது தெரியவருகிறது.

தனியாள் வருமானத்தில் நாம் இன்னும் மிகவுமே பின்தங்கியுள்ளோம். இதற்கு நீண்ட காலம் உழைக்க வேண்டியுள்ளது. என்பதே பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளதான செய்தியில் கிடைக்கும் தரவு ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,362.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.