Show all

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்; தமிழக ஆய்வு மாணவர் தற்கொலையா

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் (நவீன வரலாறு) பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் நேற்று திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

     அவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப் படும்; நிகழ்வுக்கு முன்பாக தனது முகநூல் பதிவில், தாம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பாரபட்சமாக நடத்தப்படுவதாக பதிவிட்டிருப்பதால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

     தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்; எம்.பில். மேற்படிப்பு பயின்று வந்தவர் முத்து கிருஷ்ணன் அகவை27. தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு எம்.பில். மேற்படிப்புக்காக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு சேர்ந்தார்.

     பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த முத்து கிருஷ்ணன், கடந்த சில நாள்களாகவே விரக்தியுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் தனது நண்பர்கள் தங்கியுள்ள வீட்டுக்கு முத்து கிருஷ்ணன் சென்றுள்ளார்.

     அங்கு அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய அவர், தாம் உறங்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் உள்ள தனியறைக்குச் சென்றார்.

     மாலை நேரம் ஆகியும், அறை திறக்கப்படாததால் அவரது நண்பர்கள் கதவைத் தட்டியுள்ளனர். நீண்டநேரமாகியும் எந்த பதிலும் இல்லாததால் சந்தேகமடைந்த அவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

     இதையடுத்து, காவல்துறையினர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது அங்கு மின்விசிறியில் முத்துகிருஷ்ணன் தூக்கிட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது.

     இதனைத் தொடர்ந்து, அவரது உடலை மீட்ட காவல்துறையினர் அதனை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இதனிடையே, தனது முகநூல் பக்கத்தில் முத்து கிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஒரு பதிவிட்டிருந்தார். அதில், பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.ஹெச்டி மாணவர்களில் சிலர் பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றனர்.

இந்தப் படிப்புகளின் சேர்க்கைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது; வாய்மொழித் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது; சமத்துவம் மறுக்கப்படுகிறது

என அந்தப் பதிவில் முத்து கிருஷ்ணன் கூறியுள்ளார்.

     எனவே, அவரது தற்கொலைக்கு பாரபட்சமாக நடத்தப்பட்டது காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

     முன்னதாக, ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வேமூலா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

     தலித் என்ற காரணத்தால் அவர் பல்கலைக்கழகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டதே அவரது தற்கொலைக்கு காரணம் என அப்போது கூறப்பட்டது.

     மேலும், இந்த விவகாரத்தை முன்னிறுத்தி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     இந்நிலையில் ஆய்வு மாணவர் முத்துக்கிருஷ்ணனின் தந்தை கூறியதாவது:

எனது மகன் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று அவரது தந்தை ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசியபோது தேர்வை நன்றாக எழுதியிருப்பதாக முத்துக்கிருஷ்ணன் தெரிவித்திருந்ததாக ஜீவானந்தம் கூறினார்.

     அடுத்த வாரம் ஊருக்கு வரவிருந்த நிலையில், தற்கொலை செய்தி தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.