Show all

உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் மர்ம மரணம்; டெல்லியில் தொடரும் சோகம்

டெல்லியில் உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

     திருப்பூர் வௌ;ளியங்காட்டைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணன், மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்திருந்தார்.

     டெல்லி கௌதம் நகரில் தங்கியிருந்த சரவணன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது வலது கையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதற்கான அடையாளங்களை டெல்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

     இது தொடர்பாக சரவணன் தந்தை கணேசன் கூறுகையில், என் மகனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. போதை பழக்கமோ, ஊசி மூலம் மருந்து போட்டுக்கொள்ளும் வழக்கமும் இல்லை. அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. எனது மகன் உயிரிழந்த சம்பவத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

     அதே நேரத்தில் சரவணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மாணவர்களோ திடுக்கிடும் தகவலை தெரிவித்திருந்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பது மருத்துவம் படிப்போரின் உயர்ந்தபட்ச கனவு. அங்கு சேருவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்கு 3 கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 1,2 வது கலந்தாய்வுகள் முடிந்த நிலையில் தான் சரவணன் மரணம் நிகழ்ந்துள்ளது.

     சரவணன் இடம் காலியாவதால் 3-வது கட்ட கலந்தாய்வில் ஒரு மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் நேரடி திறந்த நிலைப் போட்டியில் இடம் கிடைக்காதவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குரிய ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். ஆகையால் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவேண்டும் என்பதற்காக, போட்டியில் இருக்கும் ஒருவர்தான் மர்மமான முறையில் மருத்துவர் சரவணனை கொலை செய்திருக்கும் வாய்ப்புகளும் இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தனர்.

     இடஒதுக்கீடு கோட்டாவில் எப்படியும் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக சரவணனை கொலை செய்து ஒரு காலி இடத்தை வேண்டும் என்றே உருவாக்கியுள்ள அந்த கொடூர கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் தமிழக மருத்துவர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து டெல்லி காவல்துறை சரவணன் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ளது.

     அதேபோல் தற்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் முத்துகிருஷ்ணனுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தேர்வை நன்றாக எழுதியுள்ளதாக அவர் கூறியதாக அவரது தந்தை தெரிவித்தார்.

     மேலும் கடந்த வௌ;ளிக் கிழமை (10-03-2017) அன்று அவருடைய முகநூல் பக்கத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். மற்றும் பி.ஹெச்.டி. மாணவர்கள் சமமாக நடத்தப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

     மேலும் எம்.பில். மாணவர்களுக்கான இறுதி வாய் மொழித் தேர்வில் சமத்துவம் இல்லாத நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முத்துகிருஷ்ணனின் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.