Show all

வாழ்த்துக்கள்! இன்று தீபாவளி

இன்றைய நாளில் கொண்டாடப்படும் வடஇந்திய மக்களின் விழாவான தீபாவளியும் சில ஆயிரம் ஆண்டுகளாக அதன் தொல்கதை அடையாளம் இழந்து, தமிழ்விழா போல தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: விழாமல் இருப்பதற்கு, உழவு, தொழில், வணிகம் காத்தலே- விழா என்று தமிழ்முன்னோர் நிறுவிய நிலையில், தமிழர்களுக்குச் சொந்தமான விழாக்களாக தைமாதத்துப் பொங்கல் திருநாளும், ஆடிமாதத்துக் காவிரிப்பெருக்கும், கார்த்திகை மாதத்து விளக்குத் திருவிழாவும், 5124 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரை மாதத்துத் தமிழ்ப்புத்தாண்டும், மொய்த் திருவிழாக்களும் குமுகாய விழாக்களாகவும், 

குழந்தைப் பிறப்பு, பெயர் சூட்டுவிழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா, திருமண விழா, வளைகாப்பு, என்பன குடும்ப விழாக்களாகவும் பத்தாயிரத்துக்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு நாவலந்தேய இந்தியாவில், எந்த அயலியல், எந்த அயல்மொழி தொடர்பின் ஒட்டும் உறவும் இல்லாமல் தமிழர் கொண்டாடி வந்திருந்தோம்.

தொடர்- அயலியல் மற்றும் அயல்மொழி வரவில் இன்றைக்கு தமிழர் கொண்டாடும் விழாக்கள், 'நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்' என்கிற சொற்றொடர் சொல்லும் வகைக்கு பலப்பலவாகப் பெருகி வந்து கொண்டிருக்கின்றன. 

அந்த வகையாக இன்றைய நாளில் கொண்டாடப்படும் வடஇந்திய மக்களின் விழாவான தீபாவளியும் சில ஆயிரம் ஆண்டுகளாக அதன் தொல்கதை அடையாளம் இழந்து தமிழ்விழா போல தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தீபாவளி வடஇந்திய முதலாளிகளிடம் பணியாற்றும் தமிழ்மக்களுக்கு சிறப்பு ஊதியம் பெரும் விழாவாக போற்றிக் கொள்ளப்படுகிறது. தீபாவளியின் பாட்டாசு கலாச்சாரம் ஒருபக்கம் உலகத்திற்கே பட்டாசு தயாரித்து வழங்கும் சீவகாசி தமிழ்மக்களின் வாழ்வாதாரம் என்பது மறுபக்கம் என தமிழ்நாடு தீபாவளியை மதிக்கிறது. 

வெளிநாட்டுப் பறவைகள் வலசை வரும் பறவைக் கோட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தீபாவளியை புறக்கணிக்கின்றனர். மற்றபடி தமிழ்மக்களுக்கு கிறுத்துமஸ் அணிகம் இனிக்கும், இரம்சான் ஊண்புலவு சுவைக்கும் என்பது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்கிற காரணம் பற்றியதாகும்.  

இன்று தீபாவளி திருநாள் கொண்டாடும் வடஇந்திய மக்களுக்கும், தீபாவளியை விருந்துவிழாவாக (சொந்த விழா அல்ல) சுவைக்கும் தமிழ்நாட்டு மக்களும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,411.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.