Show all

செவிடன் காதில் ஊதிய சங்காக நடுவண்அரசு! ராஜீவ் கொலைக்குற்றம் சுமத்தப் பட்டவர்களின் விடுதலையில்

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் தலைமைஅமைச்சர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டி, கைது செய்யப்பட்டு காலவரைமுறையில்லாமல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் கடிதம் குறித்த நிலைப்பாட்டை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் செவ்வாய்க்கிழமை கெடு விதித்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச அறங்கூற்றுமன்றம் குறைத்தது.

மேலும், இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்ச அறங்கூற்றுமன்றம் தெரிவித்தது.

தொடர்ந்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு, நடுவண் அரசுக்கு கடிதமும் எழுதியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து நடுவண் அரசு உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்ச அறங்கூற்றுமன்றத்தின் அப்போதைய தலைமை அறங்கூற்றுவர் எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 11 நாள் விசாரணை நடத்தியது.

இதைத் தொடர்ந்து, உச்ச அறங்கூற்றுமன்றம் அளித்தத் தீர்ப்பில், நடுவண் அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் நடுவண் அரசுக்கே உண்டு.

அதன்படி, ‘தொடர்புடைய அரசுகள் என்பதை வழக்கின் தன்மைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் எனவும், ‘ஆலோசனை என்ற சொற்களை ‘ஒப்புதல் எனவும் கருத வேண்டும். குற்றவாளிக்கு தன்னிச்சையாக தண்டனையை குறைக்க குற்றவியல் தண்டனைச் சட்டம் 432 (1) பிரிவு வழி வகுக்கவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரிசீலித்து, அதன் மீது அறங்கூற்றுவர் விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையை குறைக்க முடியும் என குறிப்பிட்டது.

இதனிடையே, ராஜீவ் கொலைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு நடுவண் அரசுக்கு கடந்த ஆண்டு மீண்டும் கடிதம் எழுதியது. கைதிகள் சார்பிலும் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது.

இந்நிலையில், ‘இது தொடர்பான வழக்கு உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் ரஞ்சன் கோகோய், ஏ.எம். சாப்ரே, நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி, அரசு வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா உள்ளிட்டோர் அணியமாகி, ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு கடந்த ஆண்டு எழுதிய கடிதத்துக்கு நடுவண் அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை என்றனர்.

இதைத் தொடர்ந்து அறங்கூற்றுவர்கள், ‘தமிழக அரசின் கடிதம் தொடர்பாக நடுவண் அரசு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அந்த முடிவுதான் வழக்கை தீர்மானிக்கும். நிலைப்பாட்டை மூன்று மாதத்துக்குள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ராஜீவ் கொலைக்குற்றம் சுமத்தப் பட்டவர்களின் விடுதலையில், கொலைக்குற்றம் சுமத்தப் பட்டவர்களின் உறவினர்களும், தமிழக அரசும், தமிழக அனைத்;துக் கட்சிகளும், தமிழக மக்களும் பல்வேறு வகையான வழிகளிலும் தங்களின் அனுதாபத்தையும் அக்கறையையும், பற்பல நியாய வாதங்களை நிறுவியும் கூட நடுவண் அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருப்பது ஏன்?

உண்மையிலேயே ஆளும் பாஜக அரசுக்கு, மோடிக்கு இதெல்லாம் தெரியுமா? இல்லை இந்த வழக்கை கையாளும் நிருவாகத்தின் பொறுப்பற்ற தன்மை காரணமா? வழக்குதளத்தில்  நடுவண் அரசின் சார்பாக நிற்கிற தமிழர் எதிர்ப்புணர்வு வர்க்கம் வஞ்சகமாக செயல்படுகிறதா? யார் துப்பு துலக்குவது?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,677

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.