Show all

சுவிட்சர்லாந்தில் 120 உலகப் பெரும் கார்ப்பரேட் நிறுவன தலைவர்களுக்கு தலைமை அமைச்சர் மோடி விருந்து

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பொருளியல் பேராசிரியர் கிளவுஸ் சுவாப் என்பவர் 1971-ம் ஆண்டு ‘உலக பொருளாதார மன்றம் என்ற அமைப்பை நிறுவினார்.

இந்த அமைப்பு ஜெனீவா நகரை மையமாகக் கொண்டு ஒரு பொதுநலச் சேவை அமைப்பாக இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் பொருளாதார மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் உலகின் தலையாய நாடுகளின் தலைவர்கள், தொழில் அதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், செயல் அதிகாரிகள், சமூகநல சிந்தனையாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், பொருளாதார மேதைகள் கலந்து கொண்டு கலந்துரையாடுவார்கள். அப்போது உலகப் பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழல், கல்வி, சுகாதாரம் தொடர்பாக புதிய முடிவுகள் எடுக்கப்படும்.

இதனால் உலக பொருளாதார மன்றத்தின் மாநாடு தலையாயத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநாடு தாவோஸ் நகரில் வருகிற இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்திய தொழில் அதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, ராகுல் பஜாஜ், சந்திரசேகரன், உதய்கோடக், நரேஷ் கோயல், ஆனந்த் மகேந்திரா, சாஜன் ஜிந்தல், சுனில் மிட்டல், அசீம் பிரேம்ஜி, ரவி ரூயா, பிரசாந்த் ரூயா, லட்சுமி மிட்டல், ஆதித்ய மிட்டல், இந்திரா நூயி, சுந்தர்பிச்சை ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டின் போது ஒரு நாள், இந்தியா சார்பில் பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார்.

அந்த விருந்தில் 120 நிறுவனங்களின் செயல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூகுள், மைக்ரோசாப்ட், நிக், சிட்டிபங்க், மிதுசுபி, சோனி, பிலிப்ஸ், எக்ஸ்பிசி போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் விருந்தில் பங்கேற்க இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்த சந்திப்பு இந்தியாவுக்கு அன்னிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உதவியாக இருக்குமாம்.

அன்னிய முதலீடுகள் எல்லாம் உடனடியாகக் குவியப் போவதில்லை என்றாலும், படிப்படியாக நாட்டின் எண்பது விழுக்காடு மக்களின் வாழ்வாதரத்தைச் சார்ந்திருக்கிற, சிறு குறு நிறுவனங்களுக்கெல்லாம் பெரிய ஆப்பு கிடைக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,676

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.