Show all

புல்லட் ரயில் பணிகளுக்காக ரூ.53,440கோடியில் ஜப்பானுடன் இந்தியா ஒப்பந்தம்

மும்பை-ஆமதாபாத் இடையே இயக்கபடவிருக்கும் முதல் புல்லட் ரயில் பணிகளுக்காக ரூ. 53,440 கோடியில் ஜப்பானுடன் இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.

மூன்று நாள் பயணமாக வரும் 11 ஆம் தேதி இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும், இந்திய பிரமதர் மோடியும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.

இதுகுறித்து ஜப்பானின் வர்த்தக பத்திரிகை, திநிக்கி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரும் 11-ஆம் தேதி மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். அப்போது இருநாடுகளிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

அதில் முக்கியமாக ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் புல்லட் ரயில் சேவையைத் தொடங்கும் ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திடுகின்றனர்.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்த பிறகு புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்தியாவின் வர்த்தக நகரான மும்பை-ஆமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிதியை டோக்கியோ நிதிநிறுவனம் வழங்குகிறது.

2017-ஆம் ஆண்டு தொடங்கும் புல்லட் ரயில் திட்டப் பணிகள் 2023-ஆம் ஆண்டு நிறைவடையும். இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு ரூ.95,530 கோடியாகும். இதில் ரூ.53,440 கோடியை ஜப்பான் கடனுதவியாக அளிக்கும். 505 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இத்திட்டத்தினால் தற்போதைய 8 மணி பயண நேரம் 2 மணி நேரமாகக் குறையும்.

மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயிலைத் தொடர்ந்து மேலும் 7 அதிவேக புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் ஜப்பானின் புல்லட் ரயில் தொழில்நுட்பத்துக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்தியாவுடன் மேற்கொள்ளப்படுவது ஜப்பானின் 2-ஆவது பெரிய புல்லட் ரயில் திட்ட ஒப்பந்தமாகும். இதற்கு முன்பு 2007-ஆம் ஆண்டில் தைவானுடன் ஜப்பான் மிகப்பெரிய புல்லட் ரயில் ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.