நேஷனல் ஹெரால்டு வழக்கில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை: அருண்ஜெட்லி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவரும் நடுவண் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி விலைக்கு வாங்கியது.

இந்தப் பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல்காந்தியும் காங்கிரஸ் கட்சியின் நிதியைத் தவறாக பயன்படுத்தியதாக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி சோனியாவுக்கும், ராகுல்காந்திக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் சோனியாவும், ராகுல்காந்தியும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த வழக்கில் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி சோனியா, ராகுல் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் ஆஜராக வேண்டும் டெல்லி மெட்ரோ பாலிடன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆளும் பாரதீய ஜனதா அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைக் கடைபிடிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  பாராளுமன்றமோ அல்லது ஊடகமோ  ஒருவர் குற்றவாளியா? அல்லது நிரபரதியா? என்று தீர்மானிக்கும் அளவுக்கு இந்தியா அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடு இல்லை.

இந்த விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. தனி நபர் புகார் அளித்துள்ளார். இதில், அரசு  செய்வதற்கு ஒன்று இல்லை. அவர்களின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. நமது நாட்டில் யாருமே சட்டத்தில் இருந்து விலக்கு பெற முடியாது. தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்யலாம். அல்லது வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.