Show all

பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி ஓட்டுநர் தூக்கில் தொங்கினார்

 

     பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி ஓட்டுநரும் உபேர் இந்தியா கால் டாக்சி நிறுவனத்தின் முதல் பெண் ஓட்டுநருமான  பாரதி பெங்களூரில் மரணம் அடைந்தார்.

தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்பு

 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வீராத் பாரதி (அகவை 39). இவர் 2005ம் ஆண்டு வேலை தேடி பெங்களூருக்கு வந்தார். பெங்களூரில் உள்ள நாகஷெட்டி ஹல்லி என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பயண ஏற்பாட்டகம் ஒன்றில் வேலை பார்த்த இவர், 2007ம் ஆண்டு கார் ஓட்டக் கற்றுக்கொண்டு சொந்தமாக கார் வாங்கி அவரே ஓட்டி வந்தார்.

 

கடந்த 2 வருடத்திற்கு முன் உபேர் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி ஓட்டுநராகவும், உபேர் இந்தியா நிறுவனத்தின் முதல் பெண் டாக்சி ஓட்டுநராகவும் இவர் மிகவும் பிரபலமானார். பல ஓட்டுநர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கினார்.

 

இந்நிலையில் பாரதி தனது வீட்டில் இறந்து கிடந்தார். தூக்கில் தொங்கிய அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா? அல்லது கொலையா? என்ற இருவேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

 

இறப்பதற்கு முன் பாரதி கடிதம் எழுதியிருக்கலாம் என்பதால் அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், தற்கொலைக்குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதேசமயம் வெளியாட்கள் யாரும் உள்ளே வந்ததற்கான அறிகுறியும் தென்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே, இப்போதைக்கு இது தற்கொலை என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.