Show all

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு! அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

காந்தி பிறந்த நாளில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்வது உள்நோக்கம் கொண்டது எனவே தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் கூறியுள்ளார். 

12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு முழுவதும், எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காந்தி பிறந்தநாள் அன்று ஊர்வலம் நடத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. 

தமிழ்நாடு முழுவதும் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்துவதற்காக அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.  ஆனால், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதுதொடர்பாக அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு காவல்துறை எழுதியுள்ள மடலில், ஒன்றிய அரசு இந்தியவின் பேரறிமுக முற்றம் அமைப்பிற்கு தடை விதித்துள்ளதால், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்தச் சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்தினால் அதில் அசம்பாவிதங்கள் ஏதும் நேர வாய்ப்பு இருப்பதாகவும் ஆகையால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் சரி, தற்போது ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள, 'இந்தியவின் பேரறிமுக முற்றம்' அமைப்பிற்கும் சரி, தமிழ்நாட்டில் பேரளவான ஆட்கள் இல்லை. அதனால் இருசாரரும் வடநாட்டில் இருந்தே திடீரென்று பேரளவாக வந்து கலந்து கொள்வார்கள் என்ற அச்சமும் துறை சார்ந்த வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் ஊர்வலத்துக்கு அனுமதி கோரியிருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்து மடல் அனுப்பியுள்ளனர். 

அதேபோல் சென்னை, ஆவடி, தாம்பரம், சேலம், திருப்பூர், கோவை மற்றும் தென் மண்டல பகுதிகளான திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மொத்தம் 9 மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து இருக்கின்றனர். இந்தப் பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும், பொது அமைதி கெடும் எனவும், ஆகையால் அனுமதி வழங்க முடியாது என தெரிவித்திருக்கிறார்கள். 

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் ஊர்வலம் என்பது திட்டமிட்ட ஒரு சதிச்செயல் என்று முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். சதி திட்டம் தீட்டுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் முதன்மை நோக்கம். காந்தியை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் தண்டிக்கப்பட்டுள்ளார். காந்தி பிறந்த நாளில் பேரணி செல்வது உள்நோக்கம் கொண்டது. ஆர்எஸ்எஸ் பேரணி காரணமாக சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அறங்கூற்றுமன்றம் அனுமதி தந்தது மிகப்பெரிய வியப்பாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் அறங்கூற்றுமன்றம் பொறுப்பேற்க முடியமா? என கேள்வி எழுப்பிய அவர், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று கூறி 3 முறை தடை செய்யப்பட்டதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று வன்னி அரசு தெளிவுபடுத்தியுள்ளார். 

காந்தி பிறந்த நாளில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்த இருந்த மனிதச்சங்கிலி பேரணிக்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,386.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.