Show all

இந்திய அரசுக்கு 1 லட்சத்து 76,000 கோடி ரூபாய் வழங்கும் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி! ஏது இவ்வளவு பணம்? கொடுப்பது சரியா?

இந்திய அரசுக்கு 1 லட்சத்து 76,000 கோடி ரூபாய் வழங்கப் போகிறது இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி. முன்பு கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநராக இருந்தவர் இப்படியான தொகையைத் தரமறுத்தார். ஆனால் தற்போது கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநராக இருப்பவர் தருகிறார். இரண்டில் ஏதாவதொன்றுதான் நியாயமானதாகவும் சரியானதாகவும் இருக்க முடியும். இது குறித்த விவாதம் தற்போது தலைப்புச் செய்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய அரசுக்கு ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறது இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி. 

முன்பு கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநராக இருந்தவர் தரமறுத்தார். ஆனால் தற்போது கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநராக இருப்பவர் தருகிறார். இரண்டில் ஏதாவதொன்றுதான் நியாயமானதாகவும் சரியானதாகவும் இருக்க முடியும். யார் சரியானவர் மற்றும் நியாயமானவர்? முன்னால் ஆளுநரா, இந்நாள் ஆளுநரா? 

வங்கி பணி நுட்ப சொற்களால் விவாதம் களமாடப் படுவதால், அடிப்படை புரியாதவர்களாய்:- நமது நாட்டு கட்டுப்பாட்டு வங்கி, நமது நாட்டு அரசுக்கு உபரி நிதியிலிருந்து ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் என்ன? இன்னும் அதிகமாகக் கூடக் கொடுக்கலாமே என்றுதான் தோன்றும்.

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் உபரிநிதியில் இருந்து ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாயை இந்திய அரசுக்கு வழங்க இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது: இதுதான் செய்தி.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி உபரி தொகையை இந்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்திய அரசின் இந்த கோரிக்கையால் எழுந்த சர்ச்சைக்கு பிறகு, கட்டுப்பாட்டு வங்கியின் அப்போதைய ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகலும் செய்தார். 

இந்த நிலையில் கட்டுப்பாட்டு வங்கி எவ்வளவு உபரி நிதியை இந்திய அரசுக்கு வழங்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் இந்திய அரசு சார்பில் இந்திய நிதித்துறை செயலர் ராஜீவ்குமார், கட்டுப்பாட்டு வங்கி துணை ஆளுநர்கள் ராகேஷ் மோகன், விஷ்வநாதன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க், கட்டுப்பாட்டு வங்கி இயக்குநர்கள் பாரத் ஜோஷி மற்றும் சுதிர் மன்கட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழு தனது அறிக்கையை இரண்டு கிழமைகளுக்கு முன்பு கட்டுபாட்டு  வங்கியிடம் சமர்ப்பித்த நிலையில், அந்த அறிக்கை குறித்து முடிவு செய்வதற்காக கட்டுப்பாட்டு வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கட்டுபாட்டு வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நடப்பு நிதியாண்டின் உபரி நிதியிலிருந்து 1,76,000 கோடி ரூபாயை இந்திய அரசுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

(நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், பொருளாதார நெருக்கடி காலங்களில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும், உபரிநிதியை ஒரு நாட்டின் கட்டுப்பாட்டு வங்கிகள் கையிருப்பாக வைத்திருப்பது வழக்கம். ஒவ்வொரு நாட்டிலும் இந்த உபரி தொகைதான் பொருளாதார சமநிலைக்கான முக்கிய காரணியாக திகழ்கிறது. அப்படி இருக்கும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் 14 விழுக்காடு மட்டுமே உபரி நிதியை இருப்பு வைத்துள்ளதாகவும், ஆனால் இந்தியாவிடம் 28 விழுக்காடு உபரி நிதி கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உபரி நிதி அதிகமாக இருப்பதால் அதனை இந்திய அரசுக்கு கொடுப்பதற்கு கட்டுப்பாட்டு வாங்கி இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.)

அடைப்புக் குறிகளுக்குள் தெரிவிக்கப் பட்டுள்ள மேற்கண்ட செய்தி “வங்கி பணி நுட்ப சொற்களால்” தெரிவிக்கப் பட்ட செய்தி. புரியமலே புரிந்ததாகத் தலையாட்டிக் கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் எளிய மக்களுக்கும் புரியும் வகையாக இந்த செய்தியை விளக்கி தெரிவித்தோமானால்:- கட்டுப்பாட்டு வங்கிக்கு இப்படி வந்த பணமா அது? அடப்பாவிகளா! இப்படியான பணத்தை கட்டுப்பாட்டு வங்கி எப்படி தூக்கிக் கொடுக்கலாம் என்று ஆறாம் வகுப்பு மாணவன் அல்லது மாணவி கூட கேள்வி கேட்பார்கள்.

இப்படித்தான் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிக் கொண்டிருக்கின்றார்களா? என்று செய்தியை விளங்கிக் கொண்ட யாரும் கொந்தளிப்பார்கள்.

பல்லாயிரம் கட்டுமானங்களைக் கொண்ட இந்திய அரசுக்கு கொடுத்து உதவக்கூடிய அளவிற்கு கட்டுப்பாட்டு வங்கிக்கு என்ன வருமானம் இருக்கிறது? அப்படி இலட்சம் கோடி ரூபாய் வருமானம் உள்ள கட்டுப்பாட்டு வங்கியை அரசே வைத்துக் கொள்ள வேண்டியது தானே? கட்டுப்பாட்டு வங்கிக்கு அந்தப் பணம் ஏது என்று தெரிந்து கொண்டாலே, அந்தப் பணத்தை எந்தக் காரணம் பற்றியும் ஒரு காசு கூட செலவிடக் கூடாது இருப்பாகவே வைத்திருக்க வேண்டும் என்று யாரும் கருத்து சொல்லி விட முடியும்.

கட்டுப்பாட்டு வங்கி மற்ற வங்கிகளைப் போல கடன் எல்லாம் கொடுத்து வருமானம் எல்லாம் ஈட்டுவது இல்லை. கட்டுப்பாட்டு வங்கி ஒரு காசு கூட வருமானம் ஈட்டும் பணிக்கானது அன்று. அப்படியானால் இந்தப் பணம் அதற்கு எப்படிக் கிடைத்தது? கட்டுப்பாட்டு வங்கியின் தலையாய வேலை ரூபாய் தாள்கள், நாணயங்கள்  தயாரித்து புழக்கத்தில் விடுவதுதான். 

நாணயங்களோ, ரூபாய்தாளோ அது என்ன மதிப்புக்கு செல்லுபடியாகும் என்று போட்டிருக்கிறதோ அந்த மதிப்புக்கு பொருளையோ உழைப்பையோ மக்கள் கொடுக்கிறார்கள். 

வெறுமனே உலோகத்தையும் , காகிதத்தையும் பத்து ரூபாய் காசு, இரண்டாயிரம் ரூபாய் தாள் என்று மதிப்பிட்டு கட்டுப்பாட்டு வங்கி கொடுப்பதால் உலோகமும், காகிதமும் குறிப்பிட்ட மதிப்பை பெறுகிறது. அப்படியானால், கட்டுப்பாட்டு வங்கி எவ்வளவு வேண்டுமானலும் தொகைகளை தயாரித்து கொடுத்து இந்தியாவில் இருக்கிற ஏழைகளை யெல்லாம் பணக்காரர்கள் ஆக்கி விடலாமே என்று கேள்வி எழுகிறதல்லவா? 

நமது இந்தியாவின் எழுபத்தி இரண்டு ரூபாயைக் கொடுத்து அமெரிக்காவின் ஒரு டாலர் மதிப்புக்கு உலகின் எந்த நாட்டிலும் என்ன பொருளும் வாங்கிக் கொள்ள முடிகிறதே? இந்திய மக்களுக்கு தேவையான எல்லா பணத்தையும் தயாரித்துக் கொடுத்து, ஒரு கோடி ரூபாய் காரெல்லாம் கூட வாங்கிக் கொள்ள முடியுமே? ஆனால் அப்படி தயாரித்துக் கொடுத்தால், எந்த நாட்டுக்காரனும் நம்முடைய இரண்டாயிரம் ரூபாய் தாளுக்கு ஒரு குண்டூசி கூட தரமாட்டான். 

அப்புறம்? நம் கட்டுப்பாட்டு வங்கி ஒரு ரூபாய் தயாரித்து வெளியிட்டாலும், ஒரு ரூபாய் மதிப்புக்கு இணையான தங்கத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும். தொடக்க காலங்களில் உலக நாடுகள் எல்லாம் நூறு ரூபாய் தயாரிக்கும் போது நூறு ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை இருப்பு வைத்திருந்தன. காலப் போக்கில், இருப்பு வைப்பதை கொஞ்சம் கொஞ்சம் குறைத்துக் கொண்டே வந்தன. 

இந்தியாவும் அப்படிக் குறைத்துக் கொண்டு வந்ததால்தான் இந்திய ரூபாயின் மதிப்பை படிப்படியாக குறைத்து விடுகின்றனர் உலக நாட்டினர். 

ஆக இந்திய கட்டுப்பாட்டு வங்கியின் உபரிநிதி என்பது கட்டுபாட்டு வங்கி தயாரித்து வெளியிட்ட ரூபாய் மதிப்புக்கு இருப்பு வைத்துள்ள தங்கம். ஆனால் நமது கட்டுப்பாட்டு வங்கி வெளியில் புழக்கத்தில் விட்ட ரூபாய் தாளின் மதிப்புக்கு தங்கம் இருப்பு வைத்திருக்க வில்லை. அப்படி இருப்பு வைத்திருந்திருப்போமேயானால் இந்திய ஒரு ரூபாயைக் கொடுத்து அமெரிக்க ஒரு டாலரைப் பெற்று விடும் வகையில் நமது ரூபாய் தாளுக்கான மதிப்பைத் தக்க வைத்திருந்திருக்க முடியும். 

ஆனால் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி, எழுபத்தி இரண்டு விழுக்காட்டு இருப்பு தங்கத்தை இந்திய அரசுக்கு கொடுத்து விட்டு 28 விழுக்காட்டு தங்கம் தான் இருப்பு வைத்துள்ளது. அதிலிருந்தும் குறிப்பிட்ட விழுக்காட்டு இருப்பு தங்கத்தை இந்திய அரசுக்கு கொடுத்து விட்டு இந்திய ரூபாயின் மதிப்பை உலகநாடுகள் குறைப்பதற்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று கட்டுபாட்டு வங்கியின் இன்றைய ஆளுநர் மிகத் தவறான முடிவை எடுத்து, இந்திய அரசுக்கு 1,76,000 கோடி ரூபாயை கொடுக்கப் போகிறார். இது பாஜக அரசியல்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,258.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.