Show all

தனக்கு பணியிடமாற்றம் கிடைத்தது ஐயப்பன் அருள் என்கிறார்! சபரிமலை சர்ச்சை ரெகானா பாத்திமா

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், கடந்த புதன் கிழமை சபரிமலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட அன்றே பெண்கள் சிலர் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். அவர்களைப் போராட்டக்காராகள் தடுத்துத் திருப்பி அனுப்பியபடி இருந்தனர். ஆனால், மறுநாள் ஆந்திரப் பெண் இதழியலாளர் கவிதா மற்றும் கொச்சி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ரெகானா பாத்திமா ஆகிய இருவரும் மூலவருக்கு 500 மீட்டர் வரை சென்று, போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதில் ரெகானா பாத்திமா குறித்து பல விதமான சர்ச்சைகளும் கருத்துகளும் வெளியாகி வந்தன. ஆனால், பாத்திமா கோயிலுக்குச் சென்ற அடுத்த நொடியே அவரது வீடு தாக்கப்பட்டது. 31 அகவை ரெகானா கேரளாவில் பெண்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தி வருபவர். முகமதிய மதத்தில் பிறந்தாலும் அதிலிருந்து வெளியே வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையே, தற்போது ரெகானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல் நிறுவனம் இடமாற்றம் செய்துள்ளது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெகானா கொச்சி போட் ஜெட்டி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் கிளையில் தொழில் நுட்பவியலராகப் பணிபுரிந்து வந்தார். தற்போது போட் ஜெட்டி கிளையிலிருந்து எர்ணாகுளம் அருகே உள்ள ரவிபுரம் பகுதிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சபரிமலைக்குச் சென்றதால்தான் புகார் கொடுக்கப்பட்டு அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனக் கேரள ஊடகங்கள் தெரிவித்து வந்தன. ஆனால், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ரெகானா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எர்ணாகுளத்தில் உள்ள எனது வீட்டின் அருகே கிளைக்கு பணியிடமாற்றம் கேட்டிருந்தேன். ஐந்து ஆண்டுகளாக பணியிடமாற்றம் கிடைக்காத எனக்கு, சபரிமலைக்குச் சென்ற பின்பு உடனே பணியிடமாற்றம் கிடைத்துள்ளது. எல்லாம் ஐயப்பன் சாமியுடைய அருள்தான். 45 நிமிட போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே 6 கிலோ மீட்டர் தூரம் அலுவலகம் சென்றுவந்த நான் இனி 2 நிமிடத்தில் நடந்தே அலுவலகம் செல்வேன். எனக்கு பணியிடமாற்றம் கொடுத்த அதிகாரிகளுக்கும் சுவாமி நல்லது கொடுக்க வேண்டும் என பரிந்துரைக்கிறார் ஐயப்பன் சாமிக்கு ரெகானா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,949.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.