Show all

கெட்டிக்காரன் புளுகு 15ஆண்டுகள் தாக்குப் பிடித்தது! மனைவியைக் கொன்று ஆள்மாறாட்டம் செய்த நபர் சிக்கினார்

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் தருண். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு வங்கி அதிகரியாக பணியாற்றும் சஜ்னி என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. தருண் தனது காதலிக்குப் பரிசு அளித்ததாகக் கூறி, அவருடன் சண்டையிட்டார் சஜ்னி.

இந்நிலையில் அடுத்த ஆண்டு காதலர் நாளன்று சஜ்னி உயிரிழந்த நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையிடம் கூறிய தருண் தனது வீட்டில் சில கொள்ளையர்கள் புகுந்து தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், அவர் கூறியதில் முரண்பாடுகள் இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்தனர். அதனை சுதாரித்துக்கொண்ட தருண் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தன்னுடன் கல்லுரியில் படித்த மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சூர் பகுதியை சேர்ந்த பிரவீன் பட்டாலே என்பவரது அடையாளத்தை திருடிக் கொண்டார் தருண். அடையாளத்தை மாற்றிக் கொண்ட தருண் முதலில் டெல்லியிலும், பின்னர் புனேவிலும் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். புனேவில் பணியாற்றியபோது அங்கு நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் மனைவி, மகன்களுடன் பதினான்கு  ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார் தருண்.

தருணின் தாயார் அன்னம்மா சாகோ மாண்ட்சூர் நகரில் வசித்து வருகிறார். அகமதாபாத் குற்றத்துறை காவலர்கள்,; அண்;மையில் இவரிடம் விசாரணை செய்தனர். அப்போது, தனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் என்றும், ஒருவர் அகமதாபாத்தில் இருப்பதாகவும், இன்னொருவர் தென் மாநிலமொன்றில் வசிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கேரளாவுக்கும், பெங்களூருவுக்கும் அன்னம்மா அடிக்கடி பயணம் மேற்கொள்வதைக் கண்டுபிடித்தனர் குஜராத் காவல்துறையினர். கேரளாவில் ஒரு தேவாலயத்துக்குச் செல்வதை அறிந்தவர்கள், பெங்களூருவுக்கு அவர் பயணம் மேற்கொண்டதற்கான காரணங்களை அலசினர்.

அப்போதுதான், அன்னம்மாவின் செல்பேசிக்கு பெங்களூரு ஆரக்கிள் நிறுவனத்தில் இருந்தும், நிஷா என்ற பெண்ணின் செல்பேசியில் இருந்தும் அழைப்புகள் வந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விசாரணையை முன்னின்று நடத்திய ஆய்வாளர் கிரண் சவுத்ரி, ஆரக்கிள் அலுவலகம் சென்று தருணின் பெயரைச் சொல்லி விசாரித்திருக்கிறார். அந்த பெயரில் யாரும் இல்லை என்று தெரிந்ததும், அவரது புகைப்படத்தைக் காட்டியுள்ளார். அப்போதுதான், தருண் தனது பெயரை மாற்றிக்கொண்டு பிரவீனாக உலா வந்தது தெரியவந்திருக்கிறது.

காவல்துறையினரின் குற்றசாட்டுகளை முதலில் மறுத்த தருண், அதன்பின் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தருண் என்ற பிரவீனின் வாழ்க்கை தொடர்பான அனைத்து உண்மைகளும் நிஷாவுக்குத் தெரியும் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,954.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.