Show all

அதிர்வு கிளப்பியுள்ள அடாவடி!

ஒடிசாவில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில், கட்டணம் செலுத்தாத மாணவர்களைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வைக் கிளப்பியுள்ளது.

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. முந்தாநாள், அங்கு பயிலும் 34 மாணவர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்ததாக செய்தி வெளியாகி நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் தெரிவித்த நிர்வாகிகள், அவர்கள் தங்கள் பெற்றோருக்கு பேசி மூலம் தகவல் தெரிவிக்க அனுமதி மறுத்துவிட்டதாகவும், ஏறத்தாழ 5 மணி நேரம் அவர்களை சாப்பிடவோ, நீர் பருகவோ, கழிப்பறை செல்லவோ கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஐந்து மணிநேரம் கழிந்த நிலையில், கட்டணம் செலுத்தாதது குறித்த கவனஅறிக்கைளை மாணவர்களுக்கு வழங்கி, அதை அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கொடுக்கும்படி கூறியதாகவும், இந்த அடாவடியால் சினமடைந்த பெற்றோர்கள் நேற்று பெருமளவில் திரண்டு, பள்ளி முன்பு அமர்ந்து முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அந்தப் பெற்றோரில் ஒருவர், தான் ஏற்கெனவே இயங்கலை வாயிலாக பள்ளிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டதாகவும், ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது தெரியவில்லை என்றும் கூறியதும் கவனம் பெற்றது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,350.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.