Show all

824கோடி மோசடி! குற்றப்பட்டியலுக்கு வரும் இன்னொரு கடனாளி; கனிஷ்க் கோல்டு நிறுவனம்

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வங்கிகள் கோடிகணக்கில் கடன் கொடுத்து விட்டு, தொடர் பராமரிப்பு இல்லாமல், மேலடுக்கு அதிகாரிகளின், திடீர் ஆய்வுகளில் நெருக்கும் போது, யார் நமது கடனாளிகள் என்று தூசு தட்டுவார்கள். 

முதல் பத்து கடனாளிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் திருப்பிச் செலுத்திய பணமெல்லாம் வட்டிக்கு வரவு வைத்து விட்டு, அசலை, வாங்கிய கடனை விட பலமடங்கு உயர்த்திக் காட்டி, ஏழு நாட்களுக்குள் எல்லா கடனையும் திருப்பிச் செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்று கடனாளிக்கு திடீரென்று நோட்டீஸ் அனுப்புவார்கள். கடனாளியோ, தான் திருப்பிச் செலுத்திய தொகையை எல்லாம் அசலில் கழித்து கணக்கு வைத்துக் கொண்டு, வங்கி தன் மீது நிர்பந்திக்கும் தொகைக்கும், தான் கட்ட வேண்டியாதாக கணக்கு வைத்திருக்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக அதிர்ச்சி அடைவார்கள்.

இருபக்கமும் சொற்கள் தடிக்கத் தொடங்கும்.  பல ஆண்டுகளாக பலகோடி ரூபாய்கள் வரவு-செலவு வைத்தும் கொஞ்சமும் நன்றியில்லாச் செயல்பாட்டில் கோபமடைவார் கடனாளி. வங்கி நிருவாகம், சட்ட அமைப்பு, தனக்கான நெருக்கடிகளை கொண்டு கடனாளிக்கு மோசடியாளர் என்று பட்டம் கட்டும். இருபக்கமும் வரவு செலவுகளை நிறுத்திக் கொள்வார்கள். 

உடனே ஊடகங்கள் வானத்தில் இருந்து குதித்த தாங்கள், வேற்றுக்கோளைச் சேர்ந்தவர்களைப் போல, கடனாளியை திடீரென்று நேற்றுக் காலை முளைத்த காளாண் போல, கடனாளி மீதான கதைகளைக் கட்டத் தொடங்கி விடுவார்கள்.

இப்போது கடனாளி குற்றவாளியாகவே மாறி விடுவார். ஓடுவார் ஓடுவார் ஓடிக்கொண்டேயிருப்பார். அப்படி ஓடத்தொடங்கிய கடனாளிகள்-

தொழிலதிபர் விஜய் மல்லையா, வைர நகை வியாபாரி நிரவ் மோடி ஆகியோர் பட்டியலில் இப்போது கனிஷ்க் கோல்டு நிறுவனம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த ஓடிப் பிடித்தல் விளையாட்டைப் பற்றிய வருணனைகள கொஞ்ச காலம் ஊடகங்களில் தலைப்பில் பார்க்கலாம். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கூட்டமைப்பு சென்னை மண்டலத்தின் பொது மேலாளர் ஜி.டி. சந்திரசேகர் டெல்லியில் உள்ள நடுவண் குற்றப் புலனாய்வு இணை இயக்குநருக்கு 16 பக்கத்தில் புகார் கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை தியாகராயநகரில் கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் ‘கிரிஸ்’ என்ற பெயரில் காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள பக்கத்துரை, நடராஜபுரம் கிராமங்களில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் தங்கநகைகள் பெரிய நகைக்கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகள், தங்கநகைகள் கையிருப்பு போன்ற விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

அப்போது இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த 2007-08-ம் ஆண்டு முதல் 2015-16-ம் ஆண்டு வரை படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. எனவே இந்த நிறுவனத்துக்கு 14 வங்கிகளில் புதிதாக கடன்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ‘எஸ்.பி.ஐ.’ வங்கியில் ரூ.175 கோடி, அண்ணாசாலை ‘பஞ்சாப் நேஷ்னல்’ வங்கியில் ரூ.115 கோடி, தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள ‘பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் ரூ.45 கோடி, ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியில் ரூ.30 கோடி, அண்ணாசாலையில் உள்ள ‘சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் ரூ.20 கோடி, தேனாம்பேட்டையில் உள்ள ‘ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர்’ வங்கியில் ரூ.35 கோடி, ‘தமிழ்நாடு மெர்க்கண்டைல்’ வங்கியில் ரூ.25 கோடி, ராயப்பேட்டை ‘கார்ப்பரேஷன்’ வங்கியில் ரூ.20 கோடி, சைதாப்பேட்டையில் உள்ள ‘ஐ.டி.பி.ஐ.’ வங்கியில் ரூ.45 கோடி, ‘சிண்டிகேட்’ வங்கியில் ரூ.50 கோடி, மயிலாப்பூரில் உள்ள ‘எச்.டி.எப்.சி.’ வங்கியில் ரூ.25 கோடி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ‘ஐ.சி.ஐ.சி.ஐ.’ வங்கியில் ரூ.25 கோடி, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கியில் ரூ.30 கோடி, ஆயிரம் விளக்கில் உள்ள ‘ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத்’ வங்கியில் ரூ.18 கோடி என மொத்தம் 14 வங்கிகளில் 658 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனுக்காக கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர்களான நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையை சேர்ந்த பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோருடைய பல்வேறு சொத்துகளில் உறுதிப் பத்திரம் பெறப்பட்டன.

இந்நிலையில், கனிஷ்க் கோல்டு நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கடன் கொடுத்த 8 வங்கிகளுக்கு வட்டியையும் செலுத்தவில்லை. அசல் பணத்தையும் வழங்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து வங்கிகளுக்கும் வட்டி செலுத்தப்படவில்லை.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் அலுவலகம், நகைகள் தயாரிப்புக் கூடம், ஷோரூம் ஆகிய இடங்களில் வங்கி கூட்டமைப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் ஜெயின் நகை இருப்பு விவரம் குறித்து போலியான ஆவணங்களைக் தாக்கல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை நிதிநிலை அறிக்கைகள், விற்பனை ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

எனவே சட்டவிரோதமாக கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடன் கொடுத்த வங்கிகளுக்கு வட்டியும், அசல் தொகையும் செலுத்தாமல் ஏமாற்றி உள்ளது. இதன் மூலம் 14 வங்கிகளிடம் பெற்ற கடனை வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாமல் ரூ.824 கோடியே 15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,734.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.