Show all

நாளை வெளியாகிறது 5 மாநில தேர்தல் முடிவுகள்

உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த 2 மாதங்களாக பல கட்டங்களாக நடைபெற்றது.  வாக்குப்பதிவு அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து 5 மாநிலங்களிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

     காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. அடுத்த சில நிமிடங்களில் முன்னணி நிலவரம் வெளியாகி விடும். காலை 11 மணிக்கு 3 மணி நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னணி விவரம் தெரிந்து விடும். பகல் 12 மணிக்குள் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது தெரிந்துவிடும்.

     இந்நிலையில் உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. விஎம்ஆர் நிறுவனம் நடத்திய முடிவுகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நேற்று வெளியிட்டது.

     இதில் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பறிகொடுக்கிறதாம். பாஜக நினைத்தபடியே அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறதாம். ஆளும் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்கு 110 முதல் 130 இடங்கள்தான் கிடைக்குமாம். பாஜகவுக்கு 190 முதல் 210 இடங்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 57 முதல் 74 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா,உத்ரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்கள் வர வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆம் ஆத்மி அதிக இடங்களைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.