Show all

அம்மா உணவகங்களில் செயலலிதா படம் மறைக்கப்பட்டன

இராதா கிருட்டிணன் நகர் தொகுதியில் தேர்தல் பணிகள் உடனடியாக தொடங்கின. அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் மறைக்கப்பட்டன.

     சென்னை இராதா கிருட்டிணன் நகர் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டிருந்த முதல்-அமைச்சர் செயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி காலமானார். இதையடுத்து காலியாக இருந்த இராதா கிருட்டிணன் நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது.

     இந்த அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் செய்திருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியிலும், பதாகைகள், சுவரொட்டிகளை அகற்றும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அம்மா உணவகங்களில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன.

     மாநகர பேருந்து நிறுத்த நிழற் குடைகளில், ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளும் மறைக்கப்பட்டு வருகின்றன.

 

     9-ந்தேதி (நேற்றுமுன்தினம்) முதல் ஏப்ரல் 17-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

     இராதா கிருட்டிணன் நகர் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை 16-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு பெறப்படும் இராதா கிருட்டிணன் நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம், வேட்புமனு செய்ய வருவோர்கள் அமர்வதற்கான அறை போன்றவற்றை திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறன.

     தேர்தல் நடத்தும் அதிகாரி, தேர்தல் பொறுப்பாளர்கள், பார்வையாளர்கள் போன்ற அதிகாரிகள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் வாக்காளர்கள் பணம் வாங்காமல் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

     வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தொகுதி நுழைவுவாயிலில் சோதனை சாவடிகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் ரோந்து பணி, வாகன சோதனையும் தீவிரப்படுத்த உள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி மையங்கள் கணக்கெடுக்கப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பும், கண்காணிப்பு படக்;கருவிகளும் பொருத்தப்பட உள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படை வீரர்களும் வரவழைக்கப்பட உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.