Show all

சீராமைக்கப்பட்ட நான்காவது நாளில் நிகழ்ந்த சோகம்! குஜராத்தில் அறுந்த கம்பிவடப் பாலம் 91பேர்களை பலிகொண்டுள்ளது

மோர்பி கம்பிவடப் பாலம் சீரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட நான்காவது நாளில், இந்தக் கோர விபத்து நடந்துள்ள நிலையில்- பாலத்துக்கு தகுதிச்சான்று பெறுவதற்கான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாலத்தின் தகுதியின்மை முன்பே அறியப்பட்டிருக்கும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: குஜராத்தில் உள்ள மோர்பி நகரில் கம்பிவடப் பாலம் அறுந்து விழுந்து 91 பேர் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மோர்பி கம்பிவடப் பாலம் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட நான்காவது நாளில் இந்த கோர விபத்து நடந்துள்ள நிலையில்- பாலத்துக்கு தகுதிச்சான்று பெறுவதற்கான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாலத்தின் தகுதியின்மை முன்பே அறியப்பட்டிருக்கும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

குஜராத்தில் மோர்பி நகரில் மச்சு ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் இருபுறமும் மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் ஆற்றின் குறுக்காக கம்பிவடப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பேரறிமுகமான பாலங்களில் இதுவும் ஒன்றாகும். இதனால் மோர்பி நகருக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்நிலையில் தான் நேற்று மாலை வழக்கம்போல் கம்பிவடப் பாலத்தில் சுமார் 500 பேருக்கும் அதிகமானவர்கள் சென்றனர். சிலர் பாலத்தில் நின்றபடி ஆற்றில் ஓடும் தண்ணீரைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கம்பிவடப் பாலம் அறுந்து விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதி தண்ணீருக்குள் மூழ்கியது. இதனால் ஆற்று தண்ணீரில் பலர் மூழ்கினர். இதில் பலர் நீச்சலடித்து வெளியே வந்தனர். இருப்பினும் பேரளவானவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இன்னும் சிலர் அறுந்து தொங்கிய பாலத்தின்பகுதியில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார்கள். 

காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அக்கம்பக்கத்து பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் என அனைவரும் திரண்டு வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

தலைமைஅமைச்சர் மோடி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கம்பிவடப் பாலம் அறுந்து விழுந்தது பற்றி அறிந்த அவர் மீட்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 91 பேர் பலியாகி உள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் அறுந்து விழுந்த பாலம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வரலாற்றுப் பழமையும், பெருமையும் மிக்க இந்த பாலம் அண்மையில் பழுதடைந்தது. இதனால் பாலத்தை சீரமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. இந்தப் பணியை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. 

பாலத்திற்கு தகுதிச்சோதனை முன்னெடுக்காமல், அவசர கதியில் மீண்டும் பாலம் திறக்கப்பட்டதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மோர்பி நகராட்சி குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்வி ஜாலா கூறுகையில், 'சீரமைக்கப்பட்ட பிறகு கம்பிவடப் பாலத்துக்கான தகுதிச் சான்று வழங்கப்படவில்லை. இருப்பினும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது' என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கிடையே விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,418.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.