Show all

காஷ்மீர் விவகாரம்! குடும்பப் பிரச்சனையில் நேற்று பக்கத்து வீட்டுக்காரர்; இன்று பக்கத்துத் தெருக்காரர்: பாகிஸ்தானும், அமெரிக்காவும்

ட்ரம்ப், காஷ்மீர் விவகாரம் பற்றி இந்தியத் தலைமை அமைச்சர் மோடி மற்றும் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கானுடன் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்னையில் நிலவும் பதட்டத்தைக் குறைக்க வேண்டும் என இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீரை கையாள்வதில் ஏகப்பட்ட அறநெருக்கடிகளை சந்தித்து வருகிறது இந்தியா, கடந்த எழுபத்தி மூன்று ஆண்டுகளாக. இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர் மூன்றும் மூன்று நாடுகளாக பிரித்தானிய அரசால் விடுவிக்கப் பட்டன, எழுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. காஷ்மீரில் உருது மொழியைத் தாய்மொழியாகக்  கொண்ட இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்ற காரணத்தை முன்வைத்து காஷ்மீரைக் கைப்பற்றிக் கொள்ள பாகிஸ்தான் கடுமையாக முயன்றது. 

ஆனால் காஷ்மீரை பாகிஸ்தானியரிடம் இழக்க விரும்பாத அந்நாட்டின் மாமன்னர் ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டார். இந்தியாவில் எந்த மாநிலங்களுக்கும் வழங்கப் படாத சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35அ ஆகியவற்றை கேட்டுப் பெற்றுக்கொண்டு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைத்தார். 

தனி நாடு போலவும், உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமிய மக்களை அதிகம் கொண்ட காஷ்மீரை எளிதாக, என்றாவது ஒரு நாள் கைப்பற்றி விட முடியும் என்று, ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் உறுதியாக கடந்த எழுபத்தி மூன்று ஆண்டுகளாக நம்பி வந்திருக்கிறது பாகிஸ்தான். 

காஷ்மீர் மக்கள் சிறப்புத் தகுதியை வைத்துக் கொண்டு பெரிதாக எதையும் சாதிக்கவில்லை; சாதிக்க முடியவும் இல்லை. ஒரு பக்கம் பாகிஸ்தானின் முளைச்சலவை, மறுபக்கம் இந்திய அரசின் சந்தேகப்; பார்வை என்று எப்போதும் நெருக்கடியில்தான் வாழ்ந்து வந்தனர் காஷ்மீர் மக்கள். இந்தியாவின் சந்தேகப் பார்வையால், இந்திய இராணுவம், எப்போதும் முகாமிட்டு இருந்தது காஷ்மீரில்; எந்தக் கட்சி இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற்ற போதும் தொடர்கதையாக எழுபத்தி மூன்று ஆண்டுகளாகவே.

இந்த நிலையில்தான் பாகிஸ்தானை அப்புறப் படுத்தும் வழி என்று கருதி, எலிக்குப் பயந்து கூரையைக் கொளுத்திய கதையாக பாஜக நடுவண் அரசு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35அ ஆகியவற்றை ரத்து செய்து சட்டமுன்வரைவு பதிகை செய்தது. இந்த சட்டமுன்வரைவு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு ஒன்றியப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நமக்கும் நமது பிள்ளைக்குமான சிக்கலில் பலநேரங்களில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடுவதற்கு வழி வகுத்து வம்பில் மாட்டிக் கொள்வது போல, தேவையில்லாமல், நமது பிள்ளைகளுக்கு வழங்கிய தகுதியை பறித்து, பாகிஸ்தான் இந்தத் தகுதி நீக்க விவகாரத்தில் தலையிட அனுமதித்து விட்டோம். குடும்பத்திற்குள் பிரச்சனை பெரிதாக்கப் பட பக்கத்து விட்டுக்காரன் அதைப் பக்கத்து தெரு வரை எடுத்துச் சென்று வம்பிழுப்பான். அதுபோலத்தான் தற்போது பாகிஸ்தான் நம்முடைய பாஜக நடுவண் அரசை அமெரிக்காவிடம் கோத்து விட்டிருக்கிறது. 

இந்நிலையில் ட்ரம்ப், மீண்டும் காஷ்மீர் விவகாரம் பற்றி இந்திய தலைமை அமைச்சர் மோடி மற்றும் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கானுடன் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள கீச்சுப் பதிவில், இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கான் என என்னுடைய இரண்டு நல்ல நண்பர்களிடம் பேசினேன். வர்த்தகம், கூட்டாண்மை மற்றும் மிக முதன்மையாக காஷ்மீரில் பதட்டங்களைக் குறைப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் இணைந்து பணியாற்றுவது போன்றவை குறித்துப் பேசினோம். இது கடினமான சூழ்நிலைதான் இருந்தாலும் நல்ல உரையாடல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் பிரச்னையில் நிலவும் பதட்டத்தைக் குறைக்க வேண்டும் என இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,250.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.