Show all

செலவு ஆண்டுக்கு 250கோடி இலவச உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகளுக்காக: சாய்பாபா கோயில்

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சொந்த மான 40 கிலோ தங்கத்தை தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கவுள்ளது என்று கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையெடுத்து ஷீரடி சாய் பாபா கோயிலும் தற்போது இந்த திட்டத்தில் இணைய இருப்பதாக உறுதியளித்துள்ளது.

சாய் பாபா கோயிலின் அறக்கட்டளை பாதுகாவலர்கள் 200 கிலோ தங்கத்தை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் மும்பை உயர் நீதிமன்றம் பக்தர்கள் கோயிலுக்கு வழங்கும் தங்கத்தை அறக்கட்டளை உருக்க கூடாது என தடை விதித்துள்ளது

சாய் பாபா கோயில் அறக் கட்டளையை சார்ந்த உறுப் பினர்கள் தங்கத்தை ஏலம் விடும் முடிவுக்கு வந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மனுதாரர்கள் தங்கம், வைரம் ஆகியவை பக்தர்களால் சாய் பாபாவுக்கு வழங்கப்படுபவை. நிதி திரட்டுவதற்காக இந்த ஆபரணங்கள் கொடுக்கப்படுவது இல்லை என்று வாதத்தை வைத்த பிறகு ஏலம் விட முடியாது என்று கூறி உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

அறக்கட்டளை பாதுகாவலர்களான நிர்வாக அதிகாரி பாஜிராவ் ஷிண்டே, மாவட்ட ஆட்சியர் அனில் கவுவாடே, மாவட்ட நீதிபதி  காந்த் குல்கர்னி ஆகியோர் தங்க சேமிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்யும் திட்டத்தை உறுதி செய்துள்ளனர். மேலும் நீதிமன்ற தடையை நீக்கும் வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

அடுத்த வாரம் நாங்கள் சந்திக்க உள்ளோம் அப்போது ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம். தடைக்கு எதிராக நாங்கள் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறோம்,

என்று ஷிண்டே தெரிவித்தார்.

மேலும் சாய் பாபா சிலை மற்றும் நகைகள் 180 கிலோ இருக்கிறது. அதை நீக்க மாட்டோம் என்று கூறினார்.

உயர் நீதிமன்றம் தங்கத்தை டெபாசிட் செய்ய அறக்கட்ட ளைக்கு அனுமதி வழங்கினால் வருகின்ற வட்டி வருமானத்தை வைத்து தொண்டு நிறுவனம் விரிவுபடுத்தப்படும். இந்த பணத்தை மருத்துவ செலவுகள் வேண்டுவோருக்கு அளிக்கப்படும். நாங்கள் ஆண்டுக்கு 250 கோடி ரூபாயை இலவச உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகளுக்காக செலவு செய்து வருகிறோம் என்று ஷிண்டே தெரிவித்தார்.

ஷீரடி சாய் பாபா கோயில் இந்தியாவில், மிகப்பெரிய செல்வமுடைய ஐந்து கோயில்களில் ஒன்றாகும்.

இக்கோயிலுக்கு 380 கிலோ தங்கம் சொந்தமாக உள்ளது. தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ் 200 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்தால் ஆண்டு வட்டியாக 1.25 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.