Show all

யாரை நடிக்க வைப்பது, குழப்பத்தில் படக்குழுவினர்! இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் யோகி பாபுவையா, வடிவேலுவையா

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு இன்னமும் பங்கேற்காத நிலையில், வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

வடிவேல் கதைத்தலைவனாக நடித்து வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' என்ற பெயரில் இயக்குனர் சங்கர் தயாரிக்கத் தொடங்கினார் இதிலும் கதைத்தலைவனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர். 

இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படத்தில் நடித்த வடிவேலு ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு விலகினார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்கையும் பிரித்துவிட்டனர். இதனால் பலகோடிகள் நட்டம் ஏற்பட்டது. 

இந்தப் பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் சங்கர். வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதை தொடர்ந்து படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு சம்மதித்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதுவரை படப்பிடிப்புக்கு அவர் செல்லவில்லை. இதனால் படக்குழுவினர் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபுவை இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் கதைத்தலைவனாக நடிக்க வைக்க ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.

யோகிபாபு முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 10 படங்களில் நடித்து இருந்தார். தற்போது தர்மபிரபு என்ற நகைச்சுவை படத்தில் எமன் வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனாலும் யோகிபாபு நடிப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. வடிவேலுவை மீண்டும் நடிக்க வைப்பதில் படக்குழுவினர் உறுதியாக இருப்பதாகவும், அது நடக்கவில்லை என்றால் யோகிபாபு நடிப்பது பற்றி சிந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,068.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.