Show all

ஆர்.கே.செல்வமணி தேர்வு! தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக.

நேற்று நடந்து முடிந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அதன் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர். 

தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவியை விட்டு விலகுவதாக பாரதிராஜா அறிவித்தார்.  இதனை அடுத்து, திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சென்னை, வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் போட்டியிட்டனர். 

துணை தலைவர் பதவிக்கு கே.எஸ் ரவிக்குமார், வேல் முருகன், ரவி மரியா போட்டியிட்டனர். மொத்தம் 2,400 உறுப்பினர்கள் உள்ள இயக்குனர் சங்கத்தில் 2,045 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 1,503 வாக்குகள் பதிவாகின. 

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகர், 100 வாக்குகள் மட்டுமே பெற்றார். பதிவான மொத்த வாக்குகளில் 17 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,221.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.