Show all

இந்த முறை தமிழ்ப் புத்தாண்டு கலைகட்டும்! தமிழ்த்திரைக்கு நான்கு படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.

இந்த முறை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த்திரைக்கு நான்கு படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. அவை விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப்போற்று, சசிகுமார் நடித்து வரும் கொம்பு வச்ச சிங்கம்டா, விசாலின் சக்ரா திரைப்படமும் தமிழ் புத்தாண்டை குறி வைத்துள்ளதாகவும் தமிழ்த்திரையுலகில் செய்திகள் பரவி வருகிறது.

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ள முதல் படம் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்தப் படத்தை தமிழ் புத்தாண்டு நாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர.; இந்தப் படம் 90 விழுக்காடு முடிவடைந்த நிலையில் அனைத்து திரைப்படவணிகர்களிடம் இந்தப்படம் சித்திரை ஒன்றில் தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக வெளிவரும் என்றே கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

அடுத்து அதே தமிழ் புத்தாண்டு நாளில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அந்த படத்தின் குழுவினர்களிடமிருந்தும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இறுதிச்சுற்று மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கும் படம் என்பதால், சூர்யாவுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர் டெக்கான் நிறுவனம் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு படத்தைத் தான் சூரரைப் போற்று என்ற பெயரில் சுதா கொங்கரா இயக்கி வருகிறார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இந்த படம் வாழ்க்கை கதை கிடையாது. அவருடைய கதையை வாங்கிய சுதா கொங்கரா அதை மையப்படுத்தி வணிகவியல் நோக்கில் வேறு ஒரு புதிய கதையாக உருவாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி சற்று முன்னர் சசிகுமார் நடித்து வரும் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படமும் தமிழ் புத்தாண்டு நாளில் தான் வெளியாக இருப்பதாக உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொம்பு வச்ச சிங்கம்டா, இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், மடோனா, சூரி மற்றும் இந்தர் குமார் நடித்துள்ள நகைச்சுவை அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை இந்தர் குமார் தயாரிக்க இசையமைப்பாளர் திபு நினான் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் விசாலின் சக்ரா திரைப்படமும் தமிழ் புத்தாண்டை குறி வைத்துள்ளதாகவும் தமிழ்த்திரையுலகில் செய்திகள் பரவி வருகிறது. எம்.எஸ். ஆனந்தன் இயக்கும் இப்படத்துக்கு சக்ரா என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விசாலுடன் ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷ்ருதி டாங்கே, மனோபாலா மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்ப்டத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.