Show all

பண்பலை ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க கோரி சன்குழுமம் வழக்கு

பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்தை அனுமதிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கான அனுமதியை நடுவண் அரசு ஏலம் மூலம் ஒதுக்குகிறது. இந்நிலையில், இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தன.இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் குழு தில்லியில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி கூடியது. அப்போது, மத்திய உள்துறையிடம் இருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெறத் தவறிய சன் குழுமத்தின் விண்ணப்பங்களை இந்தக் குழு நிராகரித்தது.

இதுதொடர்பாக சன் குழுமம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் தொலைக்காட்சி குழுமங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகம் நிராகரித்து விட்டது.இந்திய டெலிகிராஃப் சட்டப்படி, பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்காக கட்டணத்தை செலுத்துவதில் ஏதேனும் குறைபாடு, ஒப்பந்தத்தில் உள்ள ஏதேனும் நிபந்தனைகள்- விதிமுறைகளை மீறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்பதை நிராகரிக்க முடியும்.எனவே, மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கான அனுமதியைப் பெற நடைபெறும் ஏலத்தில் எங்கள் நிறுவனத்தையும் பங்கேற்க அனுமதி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த நிலையில், சன் குழும நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்டட் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.அப்போது,  நடுவண் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி. ராஜகோபாலன், ஏலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டால், அதை எதிர்த்து புது தில்லியில் உள்ள உயர் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடரமுடியும். மேலும், தயாநிதிமாறன் மீது பொருளாதார குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு பொருளாதார குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை ஏலத்தில் பங்கேற்க அனுமதித்தால், இந்த அரசைக் கண்டு பொதுமக்கள் எள்ளி நகையாடுவார்கள். எனவே, சரியான காரணங்களுக்காகத்தான் மனுதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிகப்பட்டுள்ளன என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம். சத்திய நாராயணன், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்ததோடு, பிரதான மனுவுக்கு பதில் அளிக்கும்படி நடுவண் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.