Show all

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு

கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் ஆந்திர சிறப்பு காவல்படை, ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள அர்ச்சனாபுரம் காந்திநகரை சேர்ந்த சேகர்(50), ஜவ்வாதுமலை கீழ்கனவாவூரை சேர்ந்த இளங்கோவன்(22), தர்மபுரி மாவட்டம் சித்தேரியை சேர்ந்த பாலசந்தர்(27) ஆகியோர் தப்பி வந்தனர்.

கூலி வேலைக்கு சென்ற 20 தமிழர்களை ஆந்திர சிறப்புக் காவல் படை சேஷாசலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று சுட்டுக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர உயர்நீதிமன்றம் ஆணைப்படி சிறப்பு புலனாய்வு குழுவை ஆந்திர மாநில அரசு அமைத்துள்ளது. எனவே காவல் துறை பிடியில் இருந்து தப்பி வந்த சேகர், இளங்கோவன், பாலசந்தர் ஆகிய 3 பேரும் முக்கிய சாட்சிகளாக உள்ளனர்.இவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் மதுரையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த ஜூன் மாதம் 22,23–ந் தேதிகளில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இந்த நிலையில் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது,3 சாட்சிகளிடமும் விசாரணை நடத்திய போது இடையூறு ஏற்பட்டது. எனவே அவர்கள் வனப்பகுதியில் பயணித்து சென்றதாக கூறப்படும் வழித்தடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழுவினர் கேட்டனர்.இதற்கு ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர் விசாரணையை ஆகஸ்டு மாதம் 3–ந்தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்தது.

உயர்நீதிமன்ற அனுமதியைப் பெற்ற சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று திருவண்ணாமலை வந்தனர்.இந்த குழுவினர் கர்னூல் நகர டி.ஐ.ஜி. ரமணகுமார், உதவி சூப்பிரண்டு சந்திரசேகர், துணை சூப்பிரண்டுகள் ரகு, யுகந்தன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் உள்பட 30 பேர் இடம்பெற்றிருந்தனர்.இவர்கள் சாட்சிகள் சேகர், இளங்கோவன், பாலசந்தர் ஆகியோரிடம் திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் விசாரணை நடத்தினர். இதற்காக மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள் மற்றும் நிர்வாகிகள் சாட்சிகளான சேகர், இளங்கோவன், பாலசந்தர் ஆகியோரை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்திருந்தனர்.இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக்குழுவினர் 3 குழுக்களாக பிரிந்து சாட்சிகள் 3 பேரையும் தனித்தனியாக அழைத்து சென்றனர்.

ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தபடி 3 சாட்சிகளையும் துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு அவர்கள் சென்ற வழியாக அழைத்து சென்று விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.முதலில் சாட்சிகள் 3 பேரின் சொந்த ஊரில் விசாரணை நடந்தது. பின்னர் அங்கிருந்து சாட்சிகள் பேருந்து ஏறியதாக கூறிய இடம், சாப்பிட்டதாக கூறிய உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று இரவு வரை அழைத்து சென்று விசாரித்தனர். இப்படியே துப்பாக்கி சூடு நடந்த ஆந்திர வனப்பகுதி வரை சாட்சிகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் அழைத்து செல்ல முடிவு செய்தனர்.இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதுபற்றி மக்கள் கண்காணிப்பாக நிர்வாகிகள் கூறும்போது, சாட்சிகளை ஆந்திர வனப்பகுதி வரை அழைத்து சென்று விசாரிக்க ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.

ஆந்திராவுக்கு அழைத்து சென்றால் சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் கைது செய்யப் படலாம். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றனர்.ஆனாலும் திருப்பதி வனப்பகுதியில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலக வளாகம் வரை இளங்கோவனையும், நகரி புத்தூர் வரை சேகர், பாலசந்தர் ஆகியோரையும் அழைத்து சென்று சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். அப்போது மக்கள் கண்காணிப்பக நிர்வாகிகள் உடன் இருந்ததாக தெரிகிறது.இந்த விசாரணை குறித்து சிறப்பு புலனாய்வு குழு டி.ஐ.ஜி. ரமணகுமாரிடம் கேட்ட போது ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நாங்கள் நடத்திய விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்வோம். இந்த அறிக்கை வருகிற ஆகஸ்டு மாதம் 3–ந்தேதி தாக்கல் செய்யப்படும் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.