Show all

முன்னோர்களுடன் பேச முடியுமா!

முன்னோர்களுடன் பேச முடியுமா, என்று கேட்டால், ஆம்! பேசமுடியும். என்பதுதான் தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தில் நிறுவிய செய்தியாகும். அது செவிவழியாக முன்னெடுக்கப்பட்டு, பொய்யான மிகைப்பாட்டில், நம்மை மயங்கி நிற்கவைத்திருக்கிறது என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.

02,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆம்! முன்னோர்களுடன் பேசமுடியும் என்பது என்விடை. இப்படி நான் தெரிவித்த உடனேயே உங்கள் கற்பனைத் தேரை தட்டி, கற்பனை உலகிற்குள் பயணித்தால்- முன்னோர்களுடன் ஏன் பேசவேண்டும் என்கிற கேள்விக்கு விடை தேடாமல், பொய்யான மிகைப்பாட்டில் (மகத்துவம்) மயங்கி நின்றுவிடுவோம். 

தமிழர்களோடு கலந்துரையாடிய ஆரியர்கள் இதைத்தான் செய்தார்கள். அதனால், தமிழ்முன்னோர் செய்திகள் காணமல் போய், ஆரியக் கற்பனைகள் 3200 ஆண்டுகளாக நம்மை அலைகழித்துக் கொண்டிருக்கின்றன.

சிறு அகவையில் என்னை இணைத்துக் கொண்ட விளையாட்டு ஒன்று உண்டு. மலரக்கா என்ற ஒருவர்தான் இந்த விளையாட்டை ஒருங்கிணைப்பார். ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், பெண்ணும் ஆணுமாக, பக்கத்துவீட்டு அடுத்த வீட்டுப் பிள்ளைகள், பத்துக்கு மேற்பட்டவர்கள் இணைப்பில் வருவோம். 

மலரக்காவும் நாங்களும் வட்டமாக அமர்ந்து கொள்வோம். மலரக்கா தனக்கு வலப்புறம் அமர்ந்திருக்கும் பிள்ளையின் காதில் ஒரு சொலவடையை கிசுகிசுப்பார். அந்தப் பிள்ளை அடுத்தப் பிள்ளையின் காதில் அந்தச் சொலவடையைக் கிசுகிசுக்கும். மலரக்கா சொன்ன சொலவடை வட்டமடித்து வந்து மலரக்காவின் இடப்புறம் அமர்ந்திருக்கும் காதுக்குள் கிசுகிசுக்கப்பட்டவுடன்; அந்தப் பிள்ளை சத்தமாக அதை அரங்கத்திற்குத் தெரிவிப்பார். மலரக்காவும் தான் தொடங்கிய சொலவடையை சத்தமாகத் தெரிவிப்பார் இரண்டும் மாறுபட்டுக் கிடக்க எல்லோரும் பகடியாகச் சிரித்து மகிழ்வோம். தமிழ் தமிழ் என்று சொன்னால் அமிழ்து வரும் என்று மலரக்கா சொன்னது, தம் தம் என்று அடித்தால் சத்தம் வரும் என்று அரங்கத்தில் ஒலிக்கப்பட்டது நன்றாக நினைவிருக்கிறது. 

'தமிழ் தமிழ் என்று சொன்னால் அமிழ்து வரும்' என்கிற பொருள்பொதிந்த அந்த அழகான சொலவடை பல காது கடந்து வரும் போது தம் தம் என்று அடித்தால் சத்தம் வரும் என்று எப்படி சின்னாபின்னமாக்கப்பட்டு விட்டது பாருங்கள்.

தமிழ்முன்னோர் நிறுவியிருந்த, 'ஆம்! முன்னோர்களுடன் பேசமுடியும்' என்கிற செய்தியும் இன்றைக்கு பார்ப்பனியர்களை வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுக்கிற சடங்காக மாறிப்போய் கிடக்கிறது. ஆவியுடன் பேசும் பற்பல கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது.

அண்மையில் வேறு ஒரு தளத்தில் ஒரு இயங்கலை இலக்கியர், ஆன்மா- வேறுஉடல் பெற்றுவிடுவதாக சொல்கிறார்களே. அவ்வாறிருப்பின் திதி கொடுப்பதால் எவ்வாறு பலன் கிடைக்கிறது? என்று நல்லதொரு வினாவை எழுப்பியிருந்தார். பொய்யான மிகைப்பாட்டு செய்திகள் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கும் என்பது அந்த இயங்கலை இலக்கியரின் வினாவிற்கு விடையாகும்.

முன்னோர்களுடன் பேச முடியும் என்றால் செல்பேசியில் பேசுவது போல் பேசுவது அல்ல. 

நாம் பேசவிருக்கிற முன்னோரின் அடையாளத்தை நம் மனதில் முதலில் மீட்ட வேண்டும். அவரிடம் நாம் கேட்கவிருக்கிற வினாவை தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்தக் வினாவை நாம் மனதால் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். 

நாம் கேட்ட வினா கடவுளில் பதிவாகி, கடவுள், கூட்டியக்கச் சுழியமாக இருக்கிற நமது முன்னோருக்கு இணைப்பு கொடுத்து, முன்னோரிடம் இருந்து கிடைக்கிற விடையை நம் நினைவில் மீட்டித்தரும். 

முன்னோர்கள் தங்கள் அறிவால், நம்முடைய அறிவை செழுமைப்படுத்த மட்டுமே முடியும் என்பதே முன்னோர்களுடன் நாம் பேசமுடியும் என்கிற தலைப்பின் தெளிவு ஆகும். மற்றபடி நமது நண்பர்களுடன் நேரடியாகப் பேசுவது போலவோ, செல்பேசியில் பேசுவது போலவோ, முன்னோர்களுடன் பேசமுடியும் என்று தெரிவிக்க முனைந்தால், அது மிகைபாடே ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,524.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.